» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடியில் திட்டங்கள் : கோவையில் பிரதமர் தொடங்கி வைத்தார்

வெள்ளி 26, பிப்ரவரி 2021 8:55:35 AM (IST)

நெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை கோவையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், பா.ஜனதா சார்பில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தனி விமானத்தில் கோவை வந்தார். அங்கு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விழா நடைபெற்ற கோவை கொடிசியா அரங்குக்கு சாலை வழியாக குண்டு துளைக்காத கார் மூலம் மாலை 3.51 மணிக்கு வந்தார்.

அங்கு அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விழா மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மறைந்த முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் முன்னிலை வகித்தார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றார். விழாவில் மத்திய நிலக்கரி சுரங்க துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டு பேசினார்.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி நெய்வேலியில் தலா 500 மெகா வாட் திறன் கொண்ட 2 புதிய அனல் மின் திட்டம், தென்மாவட்டங் களில் 709 மெகாவாட் சூரிய மின்உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி, திருகுமரன்நகர், மதுரை மாவட்டம் ராஜாக்கூர், திருச்சி இருங்களூர் ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 4,144 குடியிருப்புகள், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.42 கோடியில் கட்டப்பட்ட பாலம் மற்றும் ரெயில்வே பாலம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டம் கோவை உள்பட 8 சீர்மிகு நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கும் திட்டம் மற்றும் தூத்துக்குடி உ. சிதம்பரனார் துறைமுகத்தில் புதிதாக 5 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம் ஆகிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதில் மொத்தம் ரூ.12 ஆயிரத்து 400 கோடியில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி, வணக்கம் என்று தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார். அப்போது அவரது ஆங்கில பேச்சு தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.முன்னதாக பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னாடை அணிவித்து வெள்ளியால் செய்யப்பட்ட பெருமாள் சிலையை பரிசாக வழங்கினார். அதைத்தொடர்ந்து துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார். இதில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Nalam PasumaiyagamBlack Forest Cakes

Thoothukudi Business Directory