» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் குடமுழுக்கு விழா பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:50:26 PM (IST)

திருச்செந்தூர் திருக்கோயில் குடமுழுக்கு விழா பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக்கூட்டரங்கில் இன்று (24.06.2025), திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற 07.07.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற 07.07.2025 அன்று வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கான வேள்விச்சாலை பூஜைகள் 01.07.2025 முதல் நடைபெறுகிறது. எனவே, திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா காலங்களில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருக்கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் வீதம் குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்திடும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உரிய ஏற்பாடுகளை செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும். திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்ய உரிய நடவடிக்கைகளை திருச்செந்தூர் நகராட்சி மேற்கொள்ள வேண்டும்.
திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகள், தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், தற்காலிக பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சுகாதார வசதி, நிழற்பந்தல், குடமுழுக்கு நிகழ்ச்சியினை பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் அகன்ற எல்இடி திரை வசதிகள் மற்றும் தேவையான இடங்களில் எல்இடி விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, இந்து சமய அறநிலையத்துறை இணைந்து உரிய காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
திருச்செந்தூர் நகர்ப்புற பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். திருக்குடமுழுக்கு நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். திருக்கோயில் வளாகத்தில் விழாக்காலங்கள் முழுவதும் (1.07.2025 முதல் 07.07.2025 வரை) மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடனும், அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதியுடனும் தயார் நிலையில் இருப்பதற்கான ஏற்பாடுகளை மருத்துவத் துறை செய்திட வேண்டும். குடமுழுக்கு விழாவில் தீயணைப்பு ஊர்தி முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்டும், மருத்துவ ஊர்தியுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
குடமுழுக்குவிழா காலங்கள் முழுவதும் திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கவும், திருக்கோயிலுக்குள் பக்தர்கள் வரிசை முறையில் நன்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு காவல்துறையினர் திருக்கோயில் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். 01.07.2025 முதல் 07.07.2025 குடமுழுக்கு விழா வரை திருக்கோயில் மேல் தளம் மற்றும் கிரிபிரகாரத்தில் பாதுகாப்புக்கு போதிய காவலர்களை நியமித்தும், சுவாமி சப்பரத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்திட வேண்டும். திருச்செந்தூர் நகர் முழுவதும் போக்குவரத்து வாகனங்களை கட்டுப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படா வண்ணம் போக்குவரத்துக் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்செந்தூர் – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக போற்றப்படுவதும், தமிழகத்தின் தலைசிறந்த திருக்கோயில்களில் முக்கியமானதாக கருதப்படுவதுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டுவிழா சீரும் சிறப்போடும் நடைபெற அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், போக்குவரத்து வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடியிலிருந்து சாலை மார்க்கமாக வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக வீரபாண்டியபட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட ஜே.ஜே. நகர் செல்லும் வழியில் உள்ள கல்லூரி விடுதியின் எதிர்புறத்திலும், ஜே.ஜே. நகர் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களையும், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தினையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து, வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக மண் திட்டுகளை பவர் ரோலர் வாகனங்களை பயன்படுத்தி சமன் செய்திடவும், மேலும், பக்தர்கள் அமர்ந்து குடமுழுக்கு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் அகன்ற எல்இடி திரைகள், தேவையான அளவில் நிழற்பந்தல்கள், இருக்கை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் மற்றும் தேவையான இடங்களில் எல்இடி விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துமிடங்களிலிருந்து சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக மிகைநீர் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். அனுமதி வாகனச்சீட்டுடன் வருகைதரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தியாகி பகத்சிங் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். அதேபோன்று, திருநெல்வேலியிலிருந்து சாலை மார்க்கமாக வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அன்பு நகர் – 1 மற்றும் 2, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அலுவலக குடியிருப்பு அருகில், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாகன நிறுத்துமிடங்களையும், வேட்டையாளிமடம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையத்தினையும், தொடர்ந்து, கன்னியாகுமரி – நாகர்கோவிலிருந்து சாலை மார்க்கமாக வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக செந்தில் குமரன் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துடத்தினையும் மற்றும் இந்திய உணவுக் கழகத்தின் குடோன் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, பக்தர்கள் அமர்ந்து குடமுழுக்கு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் அகன்ற எல்இடி திரைகள், தேவையான அளவில் நிழற்பந்தல்கள், இருக்கை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் மற்றும் தேவையான இடங்களில் எல்இடி விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பாக மேற்கண்ட அனைத்து இடங்களிலும் ஒன்றாம் தேதியில் இருந்து ஏழாம் தேதி வரையில் நாள் முழுவதும் அறுசுவை அன்னதானம், வடை பாயாசத்துடன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவினை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகள், வேள்விச்சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, திருப்பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்கள்.
தொடர்ந்து, வேள்விச்சாலை அருகில் அமைக்கப்படவுள்ள மர கேலரி மற்றும் ராஜகோபுரம், விமானங்களில் அமைக்கப்படும் படிசாரங்களை (Watch Tower, T.V. Tower) ஆய்வு செய்து, அதுபோல், ஜே.ஜே நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் நிறுத்துமிடங்களிலிருந்து சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக மிகைநீர் கால்வாயின் குறுக்கே இரும்பினால் ஆன தற்காலிக மரப்பாலம் அமைப்பட்டு வரும் நிலையில், தேவையான ஆலோசனைகள் வழங்கி மரப்பாலத்தின் உறுதித்தன்மை சான்று வழங்க பொதுப்பணித்துறையினரை கேட்டுக் கொண்டார்கள்.
மேலும், வருகைதரும் பக்தர்களின் அவசர மருத்துவ உதவிகளுக்கு தேவையான மருத்துவ சேவைகள் அளிக்கும் வகையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூடுதல் மருத்துவ வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். அதுமட்டுமல்லாமல், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையிலும் தேவையான மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் சரவணக்குமார் (நெடுஞ்சாலைகள்), லொரைட்டா (நெடுஞ்சாலைகள்), சிவசுப்பிரமணியன் (நிலஎடுப்பு, உடன்குடி), திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சிவக்குமார், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பிரியதர்ஷினி, இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளர் கண்மணி, நகராட்சி பொறியாளர் சரவணன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறிமுருகன் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாம்!
ஞாயிறு 13, ஜூலை 2025 6:24:23 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெம் பார்க் பகுதியில் குளம் அமைக்கும் பணி : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
ஞாயிறு 13, ஜூலை 2025 11:26:34 AM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: மேலும் 3பேர் படுகாயம்!
ஞாயிறு 13, ஜூலை 2025 11:19:24 AM (IST)

உயிர் மூச்சு திரைப்படத்தின் நூறாவது நாள் விழா : படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்
ஞாயிறு 13, ஜூலை 2025 10:53:10 AM (IST)

திருமண்டல தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு!
ஞாயிறு 13, ஜூலை 2025 10:30:58 AM (IST)

இசை பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் : மேயர் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 13, ஜூலை 2025 8:43:00 AM (IST)
