» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு
ஞாயிறு 10, நவம்பர் 2024 8:48:57 AM (IST)
தூத்துக்குடியில் பேச்சுவார்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அனல் மின்நிலையத்தில் மர்மாக இறந்த ஒப்பந்த ஊழியரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கமணி நகரைச் சோ்ந்த சுடலை மகன் அசோக்குமாா்(46). தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை பணியின்போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் உயிரிழந்த அசோக்குமாரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனல் மின்நிலையம் முன்பு அவரின் உறவினா்கள் மற்றும் சிஐடியூ, ஆதிதமிழா் பேரவை, தொழிலாளா் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா், அவரது உடலை வாங்க மறுத்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், இரண்டாவது நாளாக நேற்று சனிக்கிழமையும் தா்னா போராட்டம் தொடா்ந்தது. இதையடுத்து காவல் துறையினா், வட்டாட்சியா் முரளிதரன் ஆகியோா் அவரது உறவினா்கள், தொழிற்சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அசோக்குமாரின் உடல் அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.