» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் : பயணிகள் மகிழ்ச்சி!
சனி 9, நவம்பர் 2024 8:28:54 PM (IST)
நாசரேத் ரயில் நிலையத்தில் புதிதாக சுத்திகரிக்கப்பட்டு குளிரூட்டப்படும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ரயில் பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அனைத்து ரயில் நிலையங்களிலும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான முயற்சிகளை தென்னக ரயில்வே மேற்கொண்டு வருகிறது. மேலும் பயணிகள் அதிகம் வந்து செல்லும் முக்கியமான ரயில் நிலையங்களின் அனைத்து நடைமேடைகளிலும் தண்ணீர் இருப்பை உறுதி செய்யுமாறு நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் நாசரேத் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே சார்பில் புதிதாக சுத்திகரிக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் நுழைவு வாயில் அருகே 1வது நடைமேடையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் நாசரேத் பேரூராட்சியில் இருந்து புதிதாக தாமிரபரணி ஆற்று குடிநீர் இணைப்பு பெறப்பட்டுள்ளது.
இந்த தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரானது சின்டெக்ஸ் டேங்கில் சேமித்து வைக்கப்பட்டு பின்னர் சுத்திகரிக்கப்பட்டு குளிரூட்டப்படும் குடிநீர் இயந்திரத்தில் உள்ள பைப் மூலம இலவசமாகப் பயணிகள் பயன்படுத்தும் வகையில் நாசரேத் ரயில் நிலைய 1வது நடைமேடையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை ரயில் பயணிகள் பாட்டில்களில் மகிழ்ச்சியுடன் பிடித்து செல்கின்றனர்.