» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்கள், குழந்தைகளுக்கான சட்ட உதவிகள் : பழையகாயலில் சட்ட விழிப்புணர்வு முகாம்
சனி 9, நவம்பர் 2024 5:37:24 PM (IST)
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் தேசிய சட்ட சேவை தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கிராம உதய தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். மூத்த வழக்கறிஞர் ஆனந்த் பிரபு சிறப்புரை வழங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் /மூத்த உரிமையியல் நீதிபதி கலையரசி ரீனா, முகாமில் தலைமை வகித்து தலைமையுரை ஆற்றினார். மேற்படி முகாமில் 200-க்கு மேற்பட்டோர் பொது மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். முகாமில் பொதுமக்கள் தங்களுக்கு உண்டான சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத கேள்விகள் கேட்டு சந்தேகத்தை தெரிந்து கொண்டார்கள்.
சட்ட உதவி மைய நீதிபதி தனது தலைமை உரையில் தேசிய சட்டத்தினம் எவ்வாறு உருவானது என்றும், அதன் நோக்கத்தை பற்றியும் எடுத்து கூறினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் அன்றாட வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சனைகள் மற்றும் அதிலிருந்து எவ்வாறு தங்களை காத்துக்கொள்ளலாம் என்றும், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், வரதட்சணை சட்டம் குறித்தும், பெண்கள் ஆடை வடிவமைப்பில் உண்டான பிரச்சனைகள் குறித்தும், இதன் மூலம் ஏற்படும் பிரச்சனையில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாக்கலாம் என்பது குறித்தும், தேசிய சட்ட உதவி எண். 15100 குறித்தும், அதன் செயல்பாடு குறித்தும், குழந்தைகள் பாலியல் பிரச்சனை குறித்தும், 1098 செயல்பாடு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தனது செல்போன் பயன்பாட்டில் உண்டான ஆபத்து குறித்தும், அதிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாக்கலாம் என்பது குறித்தும், சட்ட உதவி மைய செயல்பாடுகள் குறித்து விளக்கமாக எடுத்து கூறினார்.
மேலும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும், சமுதாயத்தில் குழந்தைகள் படிக்கிற வயதில் படிப்பு ஒன்று மட்டுமே மிக முக்கியம் எனவும் விளக்கமாக மேற்படி கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தார்.
முகாமில் முன்னதாக கிராம உதய தொண்டு நிறுவன மேலாளர் ராமசந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். இறுதியில் கிராம உதய தொண்டு நிறுவன அலுவலர் ஆனந்த செல்வன் நன்றியுரை வழங்கினார்.
முகாமில் பொதுமக்கள் 50க்கும் மேற்ப்பட்ட மனுக்களை நீதிபதியிடம் வழங்கினர். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், கிராம உதய தொண்டு நிறுவன தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இறுதியில் சட்ட சேவை தின முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சுற்று சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வாக மரக்கன்றுகளும் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வாக மஞ்சப்பையும் வழங்கப்பட்டது.