» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50ஆயிரம் நிதி உதவி : அமைச்சர் பி. கீதாஜீவன் தகவல்

சனி 9, நவம்பர் 2024 3:33:12 PM (IST)



தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தொழில் தொடங்க ரூ.50ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி. கீதாஜீவன் தெரிவித்தார். 

தூத்துக்குடியில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்

தூத்துக்குடி அறிஞர் அண்ணா மஹாலில் இன்று (09.11.2024), சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் , மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் பல்வேறு பிரச்சனைகளைக் களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது மற்றும் தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்குத் தேவையான திட்டங்கள் வழங்க மகளிர் நல வாரியம் 02.09.2022 அன்று உருவாக்கி ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியமானது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களை தலைவராகக் கொண்டு 10 அலுவலர் சாரா மற்றும் 14 அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கையாக தொழில் பயிற்சி, சுயதொழில் மூலம் வாழ்வினை மேம்படுத்த நிதியுதவி அளிப்பது போன்ற பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

மேலும், இவ்வாரியத்திற்கென தனி வலை பயன்பாடு tnwidowwelfareboard.tn.gov.in (Web Application) 2, கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதன் மூலம், அரசின் நலத் திட்டங்களில் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோரிலிருந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளை தேர்வு செய்து, சுயதொழில் செய்து சுயமரியாதையுடன் சமுதாயத்தில் வாழ, நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறி வியாபாரம், நடமாடும் சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைக் கடைகள் (Ironing Shop) போன்ற சுயதொழில்கள் மூலமாக நிலையான வருமானம் பெற, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வண்ணம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.50,000/- வீதம் 200 பயனாளிகளுக்கு ரூ.1.00 கோடி செலவினத்தில் மானியம் வழங்கப்படும் திட்டத்தினை 2024-25 ஆம் ஆண்டில் செயல்படுத்திட ஆணை பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 200 வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள இவ்வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பயனடைவார்கள்.

சமூகத்தில் இத்தகைய பெண்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தினை முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு திட்டமாக, விரிவான நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோரின் நலன்காக்கும் வகையில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் மாவட்ட அளவில் வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களை கொண்டும், சிறந்த கருத்தாளர்களை கொண்டும் நிதியினை முறையாக கையாளுதல் குறித்த கல்வியறிவினை ஏற்படுத்துதல், சொத்துரிமை, குடும்ப வன்முறையிலிருந்து உரிய பாதுகாப்பு, இலவச சட்ட உதவி, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்றைய தினம் ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. எனவே, இந்த கருத்தரங்கிற்கு வருகைதந்துள்ள அனைத்து மகளிர்களும் கருத்தாளர்கள் வழங்கக்கூடிய விழிப்புணர்வு கருத்துகளையெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் எடுத்துகூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.

இக்கருத்தரங்கு நிகழ்ச்சியில், பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்து கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தின் மாநில உறுப்பினர் வழக்கறிஞர் சொர்ணலதா அவர்களும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டங்கள் குறித்து திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள்) காயத்ரி அவர்களும், சுயஉதவிக்குழு மூலம் மகளிர்க்கான திட்டங்கள் குறித்து உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கனகராஜ் அவர்களும், நிதியினை முறையாக கையாளுதல் குறித்த வங்கியாளர்களும், பெண்களின் பாதுகாப்பு குறித்து மருத்துவ ஆலோசனை வழங்க மரு.ராஜேஸ்வரி அவர்களும் ஆகியோர் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் நலனுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருத்துரை வழங்கினார்.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், சமூகத்தில் தங்களுக்கென தனிமதிப்பை உருவாக்கி தங்களை மெருகேற்றிக்கொள்ளும் விதமாக இக்கருத்தரங்கு அமைந்துள்ளது. குறிப்பாக தங்களுக்கு வரும் இடர்பாடுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் முறைகளை அறியும் விதமாகவும் இக்கருத்தரங்கு அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தின் மாநில உறுப்பினர் ஜே.சேவியரம்மாள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory