» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் : சிறுவனை தாக்கிய 4 வாலிபர்கள் கைது!
சனி 9, நவம்பர் 2024 11:55:59 AM (IST)
தூத்துக்குடியில் நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியதை கண்டித்ததால் சிறுவனை தாக்கிய 4பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா மகன் சரவணகுமார் என்ற சரவணன் (22). இவர் நேற்று தனது பிறந்த நாளை நடுரோட்டில் நண்பர்களுடன் கேக் வெட்டி காெண்டாடினாராம். அப்போது அந்த வழியாக வந்த 16 வயது சிறுவன் சாலையை மறித்து நிற்காமல் வழி விடுங்கள் என்று கூறினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் அந்த சிறுவனை சரமாரியாக கையால் தாக்கி, அவரது பைக்கை உடைத்து சேதப்படுத்தினார்களாம்.
இந்த சம்பவம் குறித்து அந்த சிறுவனின் தந்தை பெருமாள் தெருவை சேர்ந்த கருணாகரன் (47) என்பவர் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து, சரவணகுமார் மற்றும் அவரது நண்பர்களான டூவிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ஆனந்தகுமார் என்ற சசிதரன் (28), தாமோதர நகரை சேர்ந்த தமிழ்மணி மகன் ஆனந்த் பாபு (25), கீழ சண்முகபுரத்தை சேர்ந்த பொன்குமார் மகன் பொன் ஜெயசூர்யா (19) ஆகிய 4பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.