» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கண்புரை சிகிச்சைக்கு நவீன கருவி வழங்கல்!
சனி 9, நவம்பர் 2024 11:43:57 AM (IST)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கண்புரை சிகிச்சைக்கான நவீன கருவி அஸ்வினி சீ ஃபுட்ஸ் என்ற நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் பிரிவில் மாதம் தோறும் 2,500 வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர், 100 முதல் 200 கண்புரை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களுக்கு அதிநவீன முறையில் கையில் இல்லாமல் சிறிய துளை போட்டு லேசர் அறுவை சிகிச்சை செய்வதற்கு உதவும் ஃபாகோ மெஷின் ஹேண்ட்பீஸ் கருவியினை அஸ்வினி சீ ஃபுட்ஸ் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இக்கருவியினை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சிவக்குமாரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, துணை உறைவிட மருத்துவர் கரோலின், மருத்துவர்கள் ஃபெபின், குமரன் மற்றும் அஸ்வின் அஸ்வினி சீ ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நவீன கருவியின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் அதிநவீன லேசர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஈடாக அரசு மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவிலும் செய்யப்படும். இதனால் கண்புரை நோயாளிகள் பலன் பெறுவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.