» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புத்தக வாசிப்பால் உலகத்தைக் கைகளுக்குள் கொண்டு வரமுடியும்: கனிமொழி எம்.பி பேச்சு!

வியாழன் 3, அக்டோபர் 2024 3:15:35 PM (IST)



"புத்தக வாசிப்பால் இந்த உலகத்தைக் கைகளுக்குள் கொண்டு வரமுடியும்" என்று தூத்துக்குடியில் 5ஆவது புத்தக திருவிழா தொடக்க விழாவில் கனிமொழி எம்.பி பேசினார். 

தூத்துக்குடி புத்தகக் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா - 2024, தூத்துக்குடி சங்கரபேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் 5ஆவது புத்தகக் திருவிழாவை நிதி, சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையிலும் நடைபெறுகிறது. இன்று 3ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசியது: முதன் முதலில் கொல்கத்தாவில் இந்தியன் ஏன்சியன்ட் சொசைட்டி (Indian Ancient Society)என்ற அமைப்பு ஆரிய மொழி குடும்பத்தை முன்னிலைப்படுத்தி சமஸ்கிருதம் படித்தால் தான் இந்தியாவைப் புரிந்து கொள்ள முடியும் என்ற முன்னறிவிப்பை முன்வைத்து, சமஸ்கிருதம் இல்லை என்றால் இந்தியா இல்லை. ஆரியம் தான் இந்தியா என்ற கருத்தைப் பரப்பிக் கொண்டிருந்த சமயத்தில், முதல் முதலாக அதற்கு எதிராக எழும்பிய குரல் தூத்துக்குடியிலிருந்து தான்.

திராவிட மொழிக் குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது. அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த பொருட்களை வைத்து  திராவிட மொழிக் குடும்பம் தான் எல்லாவற்றுக்கும் முன்னதாக வந்தது என்ற கருத்தை முன்னிறுத்தி, கால்டுவெல் அவர்களின் குரல் தூத்துக்குடியிலிருந்து ஒலித்தது. எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது, எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் புரிந்து கொள்ள முடியாது. இன்னொரு வாழ்க்கை விஷயத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள மிகச் சிறந்த வழி புத்தகங்கள் மட்டும் தான். 

மறைந்த எழுத்தாளர் கி.ரா அவர்கள் சுகாதாரத்தைப் பற்றி சிறுகதை எழுதியிருந்தார். அந்த சிறுகதையில், அந்த ஊரில் ஒரு அதிகாரி சுகாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று பாடுபடுகிறார். சுகாதாரத்திற்குக் கழிவறை கட்டிவிட்டால் போதாது, அதையும் தாண்டி என்னென்ன பிரச்சனைகள் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பது ஒன்று ஒன்றாகச் சொல்லி கடைசியில் கிராம மக்கள் கட்டப்பட்ட கழிவறையை சுற்றி முள்வேலி அமைத்து, யாரும் உள்ளே போகக் கூடாது என்று செய்தார்கள். 

யாரும் உள்ளே போக்கக்கூடாது, ஏன் என்று அந்த கதையைப் படித்தால் தான், நிதர்சனத்தில் மனிதர்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் புரியும். அதனால் தான் கலைஞர் தான் வாழ்நாள் முழுவதும் புத்தக வாசிப்பின் வழியாகப் புரிந்து கொண்டு, எந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அனைத்து மக்களுக்கும் சென்று சேர கூடிய ஒன்றாக, அந்த திட்டத்தை மாற்றிக் கட்ட முடிந்தது. மனிதனுடைய வாழ்க்கையில் அடிப்படையைக் கலைஞரால் புரிந்து கொள்ள முடிந்தது. 

புத்தக வாசிப்பு என்பது மட்டுமே நம்மைத் தெளிவுபடுத்தும், நமக்கான சரியான ஒரு பாதையை உருவாக்கித் தரும். தலைமைத்துவம் என்பது மனிதனைப் புரிந்து கொள்வது  மட்டும் தான். அதனால், புத்தகம் படியுங்கள்,  வாசியுங்கள் அது மட்டும் தான் உங்களுக்கு உங்கள் கைகளுக்குள் உலகத்தைக் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய ஒன்று என்று பேசினார்.

இதில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.  மேலும், மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தில் அழைத்துவரப்பட்டு புத்தக கண்காட்சியை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத் திருவிழாக்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் கண்காட்சியாக வைப்பதற்குத் தனியாக அரங்கம் அமைக்கப்பட்டது, அந்த புகைப்பட கண்காட்சியையும் அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். முன்னதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருனாநிதி ஆகியோர் விழிப்புணா்வு ராட்சத பலூனை பறக்க விட்டாா்.

தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத் திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின் வாழ்க்கை, தூத்துக்குடி இயற்கைக் காட்சிகள் (கடற் பரப்புக்கள் நதிக் காட்சிகள். ஈர நிலங்கள், நகர்ப்புற காட்சிகள்) வனவிலங்குகள் மற்றும் ஈரநில பறவைகள், தொழிலாளர்கள் (தொழில்துறை. மீன்பிடித்தல்), விளையாட்டு போன்ற புகைப்படங்கள் இடம்பெறவுள்ளன.

விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.


தினமும் பல்வேறு சிறப்பு விருந்தினா்கள் பங்குபெறும் சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. புத்தகக் கண்காட்சியுடன் இணைந்து புகைப்பட கண்காட்சியும் நடைபெறுகிறது. மேலும், நெய்தல் கலைத் திருவிழா அக். 11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞா்கள் பங்கேற்கவுள்ளனா்.

நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தூத்துக்குடியின் சிறப்பு உணவுகளுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory