» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கை கடற்படையால் தூத்துக்குடி மீனவர்கள் 22 பேர் கைது : 2 படகுகளை பறிமுதல் செய்தனர்!
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 10:23:11 PM (IST)
தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு படகையும் பறிமுதல் செய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் மிகுந்த சோதகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 21ஆம் தேதி ஒரு விசைப்படகில் 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதே போல் மற்றொரு படகில் 23ஆம் தேதி 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
மீனவர்கள் இரண்டு விசைப்படகில் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த ராஜாமணி, அந்தோணி தேனிலா, உள்ளிட்ட தருவைகுளத்தை சேர்ந்த 17 மீனவர்கள் மற்றும் தருவைகுளத்திற்கு மீன்பிடி தொழிலுக்கு வந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் என மொத்தம் 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து கைது செய்து இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை காங்கேசம் துறைமுகம் கொண்டு சென்றனர்.
மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு படகுகள் மற்றும் மீனவர்களை விடுவித்து தாயகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.