» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அருந்ததியர் சங்க நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனுக்கு நன்றி

சனி 3, ஆகஸ்ட் 2024 9:33:00 PM (IST)



அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று அருந்ததியர் சங்க நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் அருந்ததிய மக்களின் அவல வாழ்வை அகற்றிட கலைஞர் 2008-ஆம் ஆண்டில் திட்டமிட்டார். அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் 25.3.2008 அன்று குழு அமைத்தார். அக்குழு வழங்கிய பரிந்துரையின்படி ஆதிதிராவிட மக்களுக்குள், அருந்ததியின மக்கள் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்தம் முன்னேற்றத்திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியமெனக் கருதி; ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து 3 சதவீதம் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 27.11.2008 அன்று கூடிய தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

அந்த முடிவின்படி, சட்டம் இயற்ற முனைந்தபோது கலைஞர் உடல்நலம் குன்றி சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேர்ந்தது. அப்பொழுது கலைஞர் அறிவுரைப்படி, தமிழ்நாடு அரசின் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சராகத் திகழ்ந்த இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருந்ததியினருக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை பேரவையில் 26.2.2009 அன்று அறிமுகம் செய்து நிறைவேற்றினார். 29.4.2009 இல் இது தொடர்பான விதிகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றிய அருந்ததியினருக்கான 3 சதவிகித உள் இட ஒதுக்கீட்டினை எதிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த வேளையில் 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அருந்ததியினர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், ஏற்கனவே, அதாவது 2004-ஆம் ஆண்டிலேயே உள் இட ஒதுக்கீட்டை அனுமதிக்கக் கூடாது என்று ஆந்திர மாநில வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதன் காரணமாக, அருந்தியினருக்கு 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.

இந்த வழக்கில், மாண்புமிகு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு, பட்டியலின பழங்குடியினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும்; அருந்ததியினர் உள் இட ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பினை 1.8.2024 அன்று வழங்கினர். உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வரவேற்றுப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அருந்ததியர் சமுதாயத்தின் சங்க நிர்வாகிகள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான‌ கீதா ஜீவனை முகாம் அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பு வர காரணமான திமுக அரசிற்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், திமுக மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ்; திமுக மாநகர ஆதி திராவிட நலஅணி தலைவர் முருகேசன், மகாத்மா காந்தி கூட்டுறவு சங்க தலைவர் கணேசன், ஜவஹர்லால் நேரு சமூக சேவை மையம் ஜவஹர், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய மாநில உறுப்பினர்; விஜயசங்கர், அரசு சமூக ஆர்வலர் அருந்ததி, அசோகா அறக்கட்டளை ஜெயவீரதேவன், சோலையப்பன், வீரமணி, அருந்ததியர் முன்னேற்ற சங்க செயலாளர் சங்கரன்,

அருந்ததியர் முன்னேற்ற சங்க பொருளாளர் ராமசந்திரன், அருந்ததியர் முன்னேற்ற சங்க துணை செயலாளர் நீலமேகம், அருந்ததியர் முன்னேற்ற சங்க துணை தலைவர் கணபதி, சமூக ஆர்வலர்கள் அண்ணாநகர் பால்ராஜ், தருவை கருப்பசாமி, சசிதரன், திமுக பிரதிநிதிகள் ராமமூர்த்தி,  கார்த்திக், அருந்ததியர் முன்னேற்ற சங்க அமைப்பு செயலாளர் முருகன், அருந்ததி முன்னேற்ற சங்க மகளிர் அணி செயலாளர் சுதாராணி உள்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory