» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்
சனி 18, மார்ச் 2023 3:12:55 PM (IST)

"தமிழக முதல்வர், கால்நடை வளர்ப்போரின் பொருளாதாரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்" என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் இராமானுஜம்புதூர் கிராமத்தில் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கினை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்து தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர், கால்நடை பராமரிப்புத் தொழிலினை நம்பி வாழும் மக்களின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். பொருளாதாரத்தினை உயர்த்த வருடத்திற்கு ஒரு கன்ற என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பசுந்தீவன உற்பத்தியை பெருக்கும் வகையில் 1000 ஏக்கர் மேய்க்கால் நிலங்களை மேம்படுத்துதல், 2000 ஏக்கரில் பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவன உற்பத்தி செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.3000 மானியம் வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. செயற்கை முறை கருவூட்டல் பணியை மேம்படுத்துவதற்காக பொலிக் காளை நிலையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், உறை விந்து குச்சிகளை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு வாகனங்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாவட்ட கால்நடை பண்ணையில் கருமாற்று மற்றும் ஆய்வுக்கூட கருத்தரிப்பு தொழில்நுட்ப வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து குச்சிகள் ஊட்டியில் கால்நடை பண்ணையிலேயே தயாரிக்கும் வசதி கடந்த 09.03.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளின் நலனை பேணும் வகையில் தொழுவம் சென்று தொடும் சேவை - 245 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளது. தோல் கழலை நோய், கோமாரி நோய், வெறிநோய் மற்றும் கன்று வீச்சு நோய் தடுப்பூசி பணிகள் மற்றும் குக்கிராமங்களில் 7,760 கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
கால்நடை வளர்ப்போரை தொழில்முனைவோராக உருவாக்குவதற்காக பண்ணை முறையில் கோழி வளர்ப்பு, கால்நடைகள் வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனப்பயிர் உற்பத்தி ஆகியவற்றில் தொழில்முனைவோரை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் 14 தொழில் முனைவோரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு 5 தொழில்முனைவோருக்கு முதல் தவணை மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், கடந்த திருவள்ளுவர் தினத்தன்று வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விலங்கு நல அமைப்புகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
கால்நடை நிலையங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மாநிலம் முழுவதும் செய்யப்பட்டு வருகிறது. சென்னை, திருச்சி, திருநெல்வேலி பன்முக மருத்துவமனைகளுக்கு புதிய கட்டிடங்கள், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தேனி மாவட்டங்களில் ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடங்கள், 37 புதிய கால்நடை நிலைய கட்டிடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முதலமைச்சர் , ஆண்டிற்கு சுமார் 2.25 இலட்சம் கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் 5 வகை பசுவினங்களும், 2 எருமை இனங்களும், 10 செம்மறி ஆட்டினங்களும், 3 வெள்ளாட்டினங்களும் உள்ளன. உள்நாட்டின கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, பர்கூர், புலிக்குளம் ஆகிய பசுவினங்களுக்கு ஆராய்ச்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொலிக் காளை நிலையங்களில் நாட்டின மாட்டு இனங்கள் பராமரிக்கப்பட்டு உறைவிந்து செயற்கை முறை கருவூட்டல் பணிக்கு வழங்கப்படுகிறது.
திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்ட கால்நடைப் பண்ணைகளில் குஞ்சு பொரிப்பகத்துடன் நாட்டுக்கோழிப் பண்ணைகள், தென்காசி மாவட்டத்தில் நாட்டின நாய் இனங்கள் ஆராய்ச்சி மையம், கரூர் மாவட்டத்தில் புறக்கடை கோழியின ஆராய்ச்சி மையம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாட்டுக்குட்டை மாட்டின பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உம்பளாச்சேரி மாட்டின ஆராய்ச்சி மையம், சேலம் மாவட்டத்தில் மேச்சேரி மற்றும் திருச்சி கருப்பு செம்மறி ஆட்டின ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்போர் சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்து வருடத்திற்கு ஒரு கன்று என்ற இலக்கை அடைய வேண்டும். கால்நடை வளர்ப்போருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தயாராக உள்ளது என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் எம்.லட்சுமி, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், எம்எல்ஏக்கள் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), எம்.சி. சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் எஸ்.சஞ்சீவிராஜ், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் எம்.செல்லப் பாண்டியன், தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அ.ஜோசப்ராஜ், கருங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கோமதி, மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், இராமானுஜம்புதூர் ஊராட்சித் தலைவர் அ.ஸ்ரீரங்கன் மற்றும் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பள்ளியில் ரூ.20.70 லட்சம் திட்டப் பணிகள்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 12:11:11 PM (IST)

வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:56:02 AM (IST)

தூத்துக்குடியில் பால் வியாபாரி வெட்டிக் கொலை : பட்டப்பகலில் பயங்கரம்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:47:25 AM (IST)

தூத்துக்குடியில் உலக எய்ட்ஸ் தின பேரணி!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:44:00 AM (IST)

அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து திருட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:37:02 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.40லட்சம் மதிப்புள்ள லாரி திருட்டு: ஒருவர் கைது!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:29:42 AM (IST)
