» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம்: லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஞாயிறு 30, அக்டோபர் 2022 6:02:32 PM (IST)திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹார விழா இன்று மாலை கோலாகலமாக நடந்தது. இதில்  லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 

காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனைக்கு பின்னர் யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி-அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான இன்று நடைபெற்றது. இதைமுன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். 

சூரசம்ஹாரத்திற்காக சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரைக்கு வருகை தந்தார். பின்னர் முதலாவதாக யானை முகம் கொண்ட தாரகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார். இரண்டாவதாக, சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வேலால் வதம் செய்த நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து, தலையை ஆட்டியபடி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். பின்னர் தன்முகத்தோடு எழுந்தருளிய சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர். மாமரமாகவும், சேவலாகவும் மாறி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். சூரனை சம்ஹாரம் செய்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஜெயந்திநாதர் ஆட்கொண்டார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் டிஎஸ்பி ஆவுடையப்பன் மேற்பார்வையில் சுமார் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

முருகன் அடிமைOct 30, 2022 - 07:56:41 PM | Posted IP 106.2*****

திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory