» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயிலில் வெடிகுண்டு நிபுணர் படை தீவிர சோதனை: 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சனி 29, அக்டோபர் 2022 10:22:58 AM (IST)திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணத்துவ படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து விரதமிருந்து வருகின்றனர். 

விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் மற்றும சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் மகாசூரசம்ஹார விழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மோப்பநாய் படைப்பிரிவினர் மற்றும் வெடிகுண்டு நிபுணத்துவ படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு 5 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 35 காவல் உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், 103 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital

Thoothukudi Business Directory