» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை முத்தராம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

திங்கள் 18, அக்டோபர் 2021 5:23:59 PM (IST)



குலசை முத்தராம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். 

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தராம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 15-ந் தேதி நள்ளிரவு பக்தர்களின்றி எளிமையாக நடந்தது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழாவில் 12 நாட்களில் கொடியேற்றம், சூரசம்ஹாரம், கொடியிறக்கம், வெள்ளி, சனி, ஞாயிறு தவிர்த்து 5 நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
 
நேற்று முன்தினம் மாலை கொடி இறக்கப்பட்டு அம்மன் காப்பு களையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வேடம் அணிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள கோவில்களில் காப்புகளை அவிழ்த்து, வேடங்களை களைந்து விரதத்தை முடித்துக் கொண்டனர். நேற்று சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா விழா நிறைவு பெற்றது.

திருவிழா முடிந்தததையடுத்து இன்று முதல் பக்தர்கள் வாரஇறுதிநாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவியத் தொடங்கினர். வேடமணிந்த பக்தர்கள் தாங்கள் காணிக்கையாக பெற்ற பணத்தை கோவிலில் செலுத்துவதற்காக அணி அணியாக திரண்டு வந்தனர். 3 நாட்களுக்கு பின்னர் இன்று அனுமதி வழங்கப்பட்டதால் பல்லாயிரக்கணக்கானோர் மோட்டார் சைக்கிள், கார், வேன், தனியார் பஸ்கள் மூலம் கோவிலுக்கு வந்தனர். 

இதனால் திருவிழா போல காணப்பட்டது. தொடர்ந்து அவர்கள் குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காட்சி யளித்தனர். மேலும் தசராவையொட்டி கோவிலை சுற்றி கடைகள் அனைத்தும் கடந்த 12 நாட்களாக அடைக்கப்பட்டிருந்தன. இன்று அவை அனைத்தும் திறக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். கட்டுக் கடங்காத கூட்டம் திரண்டதால் கோவில் முன்பிருந்து நாகர்கோவில் செல்லும் சாலை வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory