» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெரிய அளவில் பர்னிச்சர் பார்க் : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்

வெள்ளி 16, ஜூலை 2021 12:21:38 PM (IST)



தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பெரிய அளவில் பர்னிச்சர் பார்க் அமைக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார். 

தூத்துக்குடி ராம்நகர் துடிசியா அரங்கில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கம் (துடிசியா), தூத்துக்குடி மாவட்டம் தொழில் மையம் இணைந்து Entrepreneurs Clinic துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ், பங்கேற்று Entrepreneurs Clinic சேவையை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் வகையில் Entrepreneurs Clinic சேவையை வழங்க வேண்டும் என தெரிவித்தார்கள். அதனடிப்படையில் தமிழகத்தில் முதன்முதலாக தூத்துக்குடி துடிசியாவில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பகுதி மக்களுக்கு தொழில் தொடங்குவது என்பது ரத்தத்தில் ஊறியுள்ளது. 

வெள்ளையனை எதிர்த்து கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரனார் பிறந்த மண் இது. கோவிட் 19 கரோனா பாதிப்பால் தொழில் துறையில் சிறிது பின்னடைவு உள்ளது. இதை சரி செய்ய வேண்டும். இளம் தொழில் அதிபர்களை ஊக்குவிக்க வேண்டும். அனுபவம் உள்ள தொழில் அதிபர்கள் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அதைப்போல தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்களையும் சந்தைபடுத்த பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  சென்னையை அடுத்து தூத்துக்குடியில்தான் கப்பல் போக்குவரத்து, சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து. விமான போக்குவரத்து என அனைத்து போக்குவரத்துகளும் உள்ளது. அதைபோல தொழில் தொடங்கிட இடம் மற்றும் மின்சார வசதியும் இங்குள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது பல்வேறு மின்திட்டங்கள் மூலம் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் காற்றாலைகள் மூலம் 800 மெகாவாட் மின்சாரமும், சோலார் பவர் சிஸ்டமும் இங்கு உள்ளது. மேலும் உடன்குடியில் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் மின்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீர் வசதியும் உள்ளது. மேலும் சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகளில் பயன்படுத்த தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்தும் திட்டமும் நடைமுறைப்படுத்த உள்ளது.

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பெரிய அளவில் பர்னிச்சர் பார்க் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடியில் சிறிய அளவில் புட் பார்க் உள்ளது. அரசு நிலம் ஒதுக்கீடு செய்து பெரிய அளவிலான புட் பார்க் அமைக்கவும், இதன் மூலம் பதப்படுத்தபட்ட உணவுகள் ஏற்றுமதிக்கான உதவிகளும் செய்யப்பட உள்ளது. மதுரை, தூத்துக்குடி இன்டஸ்டிரியல் காரிடர் பகுதியில் பின்னலாடை தொழில்களும் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இளம்தலைமுறையினர் தொழில் தொடங்கிட வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), நீட்ஸ் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மானிய உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோவின் மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. ஏர்போட் விரிவாக்க பணிகளும் நடைபெற்று வருகிறது. 

இதன்மூலம் பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் ஓடுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்ட பகுதியில் ஆட்டோ ஸ்பேர்ஸ் தொழிற்சாலை மற்றும் ஆயில் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அமையும்போது இப்பகுதியில் உள்ள சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும். இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்வளர்ச்சி விரைவில் அதிகரிக்கும். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் துடிசியாவின் தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை செய்யும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா, துடிசியா தலைவர் கே.நேருபிரகாஷ், பொது செயலாளர் ஜெ.ராஜ் மற்றும் தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory