» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் நாளை முதல் லாரிகள் ஸ்ட்ரைக் : உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு

செவ்வாய் 20, ஏப்ரல் 2021 8:49:33 AM (IST)

கோவில்பட்டியில் நாளைமுதல் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதாக, லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

கோவில்பட்டி லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் புதுரோட்டில் நடந்தது. சங்க தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் கணேஷ்குமார், பொருளாளர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீப்பெட்டி லாரி புக்கிங் அசோசியேசன் சங்க தலைவர் மருதுசெண்பகராஜ் வரவேற்றார். பொருளாளர் இளங்கோவன், சட்ட ஆலோசகர் கோவிந்தராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: லாரிகளில் தீப்பெட்டி பண்டல்களை ஏற்றி, இறக்க கொடுக்கப்படும் கூலியை இதுவரை லாரி உரிமையாளர்கள் தான் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கி வந்தனர். ஒரு லாரியில் லோடு ஏற்ற ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.8 ஆயிரம் வரையிலும், லாரிகளில் இருந்து பண்டல்களை இறக்க ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரம் வரையிலும் கூலி கொடுத்து வந்தோம்.

இந்நிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 12-ம்தேதி முதல் கூலியை 30 சதவீதம் உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கேட்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முன்பு போல் லோடுகள் இல்லை. மேலும் டோல்கேட் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்.

எனவே ஜூன் 1-ம்தேதியில் இருந்து தீப்பெட்டி பண்டல்களை லாரியில் ஏற்றி, இறக்க கொடுக்கப்படும் கூலியை தீப்பெட்டி உற்பத்தியாளர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி நாளை (புதன்கிழமை) முதல் லாரிகளில் தீப்பெட்டி பண்டல்களை ஏற்ற மாட்டோம். மற்ற சரக்குகள் ஏற்றும் பணி வழக்கம்போல் நடைபெறும். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும். இதனால் நாள் ஒன்றுக்கு 2 கோடி தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Thalir Products
Black Forest Cakes
Thoothukudi Business Directory