» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய நாடாளுமன்ற தேர்தல் பற்றி தவறான கருத்து: மன்னிப்பு கோரியது ‘மெட்டா’ நிறுவனம்!

வியாழன் 16, ஜனவரி 2025 9:01:47 AM (IST)

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக ‘மெட்டா’ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை நடத்தி வரும் ‘மெட்டா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘‘கொரோனாவுக்கு பிறகு 2024-ம் ஆண்டு இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் ஆளுங்கட்சிகள் தோல்வி அடைந்தன’’ என்று அவர் கூறியிருந்தார்.

அதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்தார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி 3-வது தடவையாக ஆட்சியை பிடித்தார் என்றும், எனவே, மார்க் ஜுக்கர்பெர்க் கூறியது தவறான கருத்து என்றும் அவர் கூறினார்.

மேலும், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான நிஷிகாந்த் துபே, ‘‘மெட்டா நிறுவனத்தை எனது தலைமையிலான நிலைக்குழு விசாரணைக்கு அழைக்கும்’’ என்று கூறினார். இதற்கிடையே, ‘மெட்டா’ நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவர் சிவநாத் துக்ரால், மார்க் ஜுக்கர்பெர்க் கருத்துக்காக மன்னிப்பு கோரினார்.

அவர் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 2024-ம் ஆண்டு தேர்தல்களில் பெரும்பாலான ஆளுங்கட்சிகள் தோல்வி அடைந்ததாக மார்க் கூறியது, பல்வேறு நாடுகளை பொறுத்தவரை சரியானதுதான். ஆனால் இந்தியாவுக்கு பொருந்தாது. கவனக்குறைவால் ஏற்பட்ட இத்தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்தியா தொடர்ந்து எங்களது முக்கியமான நாடாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் நிஷிகாந்த் துபே, மன்னிப்பை ஏற்றுக்கொண்டார். அவர் கூறியிருப்பதாவது: ‘மெட்டா’ நிறுவன அதிகாரி இறுதியாக மன்னிப்பு கேட்டுள்ளார். இது, இந்தியாவின் சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றி. இனி, இப்பிரச்சினையில் நிலைக்குழுவுக்கு வேலை இல்லை. இதை முடிந்துபோன பிரச்சினையாக கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory