» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை அதிபர் கோத்தபய மாலத்தீவு தப்பிச் செல்ல உதவியா?- இந்தியா திட்டவட்ட மறுப்பு

புதன் 13, ஜூலை 2022 3:22:54 PM (IST)

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவியதாக வெளியான செய்திகளை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது. 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். ஆனால், அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய, ராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாகக் கூறப்பட்டது. 

மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தனது பதவியை இன்று (ஜூலை 13) அதிபர் கோத்தபய ராஜிநாமா செய்யவுள்ளதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாபா அபேவர்தனா தெரிவித்திருந்தார். இந்நிலையில் திரிகோணமலை கடல் அருகே உள்ள பகுதியில் இருந்து கடற்படைக்குச் சொந்தமான மிகப்பெரிய படகு மூலம் கோத்தபய ராஜபக்சவும், அவரது உறவினர்களும் திரிகோணமலை பகுதிக்கு வந்ததாகவும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவியுடன் இலங்கையில் இருந்து புறப்பட்டார். அவருடன் பாதுகாவலர்கள் இருவரும் உடன் சென்றுள்ளனர். மாலத்தீவுக்குச் சென்றடைந்த அவர், ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கையைச் சேர்ந்த சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  "அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியது என்ற அடிப்படையற்ற மற்றும் ஊக ஊடக அறிக்கையாகும். இதனை திட்டவட்டமாக மறுக்கிறோம்.

ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், ஜனநாயக நிறுவனங்கள், இலங்கை அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் மட்டுமே இலங்கை மக்களுக்கு இந்தியா உதவுகிறது. இலங்கை மக்களின் முன்னேற்றத்திற்கான அவர்களின் கனவுகளை நனவாக்க இந்தியா அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory