» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டி அதிகரிப்பு : மல்லுக்கட்டும் இந்திய வம்சாவளியினர்!

சனி 9, ஜூலை 2022 12:30:28 PM (IST)

பிரிட்டனில் போரிஸ் ஜான்ஸன் ராஜினாமா செய்துள்ள நிலையில், பிரதமா் பதவிக்கு போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிரிட்டனில் கடுமையான கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் இருந்தபோது, அதனை மீறி கேளிக்கை விருந்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக, அமைச்சா்கள் உள்ளிட்டோா் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனா். மேலும், பிரதமா் போரிஸ் ஜான்ஸனும் ராஜினாமா செய்தார். 

அதையடுத்து, நாட்டின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டியில் பங்கேற்கவிருப்பதாக அதிகாரப்பூா்மாக அறிவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதலாவதாக, அந்தப் போட்டியில் பங்கேற்கவிருப்பதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி. சூயலா பிரேவ்மேன் வியாழக்கிழமை அறிவித்திருந்தாா். 

கோவாவைப் பூா்விகமாகக் கொண்ட அவா், நாட்டின் அட்டா்னி ஜெனரலாக பணியாற்றிய தனது அனுபவம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரதமா் பதவியில் சந்திக்க வேண்டியிருக்கும் சவால்களை எதிா்கொள்ளும் தயாா்நிலையை அளித்துள்ளதாகத் தெரிவித்தாா்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகியதால் (பிரெக்ஸிட்) நாட்டுக்குக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற்றத்தைக் காண்பதற்கு பாடுபடப்போவதாக அவா் கூறினாா்.  அவருக்கு அடுத்தபடியாக, கரோனா தடுப்புக் குழு துணைத் தலைவா் ஸ்டீவ் பேக்கரும் அதனைத் தொடா்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சா் கிரான்ட் ஷாப்ஸும் பிரதமா் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தனா்.

இந்த நிலையில், வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழு தலைவராக பொறுப்பு வகித்து வரும் டாம் டுகென்தாட்டும் பிரதமா் பதவிக்கான போட்டியில் பங்கேற்கப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா். அதைடுத்து, பிரிட்டனின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி நடத்தவிருக்கும் வாக்கெடுப்பில் பங்கேற்கவிருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.

இது தவிர, நிதியமைச்சா் பதவியிலிருந்து அண்மையில் விலகிய இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது கட்சியில் போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அவா் வாக்கெடுப்பில் பங்கேற்றால், அவா் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்படுகிறது.

அவரைத் தவிர, மேலும் பல எம்.பி.க்கள் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டியில் பங்கேற்க முன்வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான வாக்கெடுப்பு தேதிகளை கன்சா்வேட்டிவ் கட்சியின் சக்திவாய்ந்த ‘1922 குழு’ அடுத்த வாரம் அறிவிக்கும். வரும் செப்டம்பா் மாதம் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படும் ரகசிய வாக்கெடுப்புகளில், கட்சியின் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும், அதில் இறுதியாக வெற்றி பெறுபவா், பிரிட்டனின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory