» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சர்ச்சையை கிளப்பிய காளி ஆவணப்படம் நீக்கம்: வருத்தம் தெரிவித்தது கடனா அருங்காட்சியகம்!

புதன் 6, ஜூலை 2022 3:31:24 PM (IST)

கனடாவில் ஹிந்து நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் வெளியான காளி ஆவணப்படம் திரையிடப்படுவதிலிருந்து நீக்கப்படுவதாக அகா கான் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சோ்ந்தவா் லீனா மணிமேகலை. கனடாவில் வசித்து வருகிறாா். அவா் இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டாா். அந்தப் போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகைபிடித்துக் கொண்டு ஓரினச் சோ்கையாளா்கள், இருபாலினத்தவரிடமும் உறவு கொள்பவா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்ளிட்டோரைக் குறிக்கும் கொடியை ஏந்தியிருப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து லீனா மணிமேகலை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கனடாவில் உள்ள டொராண்டோ மாநகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடைபெறும் சம்பவங்களைக் கற்பனையாக சித்திரித்துள்ளதாக தெரிவித்துள்ளாா். இந்த போஸ்டா் பெரும் சா்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தப் படத்தின் போஸ்டரில் காளியை சித்திரித்துள்ள விதம் மத உணா்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுதொடா்பாக லீனா மீது கெள மகாசபை என்ற குழுவைச் சோ்ந்த ஒருவா் தில்லி காவல்துறையிடம் புகாா் அளித்துள்ளாா். இந்நிலையில், கனடா தலைநகா் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஆவணப் பட போஸ்டரில் காளியை மரியாதைக் குறைவாக சித்திரித்துள்ளது குறித்து கனடாவில் வசிக்கும் ஹிந்து சமூகத் தலைவா்களிடம் இருந்து புகாா்கள் வந்துள்ளன. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளை பல ஹிந்து அமைப்புகள் அணுகியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே ஆத்திரமூட்டும் போஸ்டா்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனடா அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரகத்திலிருந்து வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அகா கான் அருங்காட்சியகத்தின் சுட்டுரைப் பக்கத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது. காளி போஸ்டர் சர்ச்சை விவகாரத்தில் "மிகவும் வருந்துகிறோம்" என்றும், ஹிந்து மற்றும் இதர ஹிந்து மத நம்பிக்கைக் கொண்டவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் தெரியாமல் தவறு நடந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோரண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம், மாணவர்களில் பல்வேறு இனத்தவர் மற்றும் பல கலாசார பின்னணி கொண்டவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. ஒவ்வொரு மாணவர்களும், தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின் பலகலாசார ஒருங்கிணைப்பு திட்டமான 'ஒரே குடையின் கீழ்' என்ற திட்டத்தில் 18 ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

டோரண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் ஆவணப்படங்கள் அகா கான் அருங்காட்சியகத்தில் ஜூலை 2ஆம் தேதி திரையிடப்பட்டது. கலை மற்று வசனங்களின் வழியாக, கலாச்சார ஒருமைப்பாட்டை உருவாக்குவதே இந்த அருங்காட்சியகத்தின் நோக்கமாக இருந்தது.

பல்வேறு மதத்தின் நம்பிக்கைகளை மதிப்பது மற்றும் பல மத நம்பிக்கைக் கொண்ட சமுதாயங்களை ஒன்றிணைப்பதும் இதன் நோக்கம். எனவே, இந்த ஆவணப்படம் இனி அருங்காட்சியகத்தில் திரையிடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோரண்டோவில் உள்ள அகா கான் அருங்காட்சியகத்தின் 'ஒரே குடையின் கீழ்' திட்டத்தில் திரையிடப்பட்ட காளி ஆவணப்படம், இந்து தெய்வத்தை அவமரியாதை செய்யும் வகையில் இருப்பதாக கனடாவில் வாழும் இந்து மதத் தலைவர்கள் குற்றம்சாட்டியிருப்பதாக, ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் கூறியிருந்த நிலையில், அகா கான் அருங்காட்சியகம் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

டோரண்டோவுக்கான இந்திய தூதர், காளி சர்ச்சை விவகாரம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எடுத்துரைத்தார்.  டோரண்டோ இந்திய தூதரகம் இது பற்றி கூறியிருப்பதாவது, ஏராளமான இந்து அமைப்புகள் கனடாவில் உள்ள அதிகாரிகளை இது தொடர்பாக தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தன. இதையடுத்து, காளி போஸ்டர் தொடர்பான அனைத்தையும் நீக்குமாறு கனடாவின் அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கோரப்பட்டது. 

லீனா மணிமேகலை இயக்கியிருக்கும் இந்த காளி ஆவணப்படத்தின் போஸ்டர் சர்ச்சையானதைத் தொடர்ந்து அவர் கூறியிருப்பதாவது, ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா அரெண்ட் லீனா மணிமேகலை என்று ஹேஷ்டேக் போடாம லவ் யூ லீனா மணிமேகலை என்று ஹேஷ்டேக் போடுவாங்க என்று கூறியிருந்தார்.

போஸ்டர் சர்ச்சை குறித்து பதிலளிக்கும் வகையில் அவர் பதிவிட்டிருந்ததாவது,  "எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

superJul 7, 2022 - 04:47:31 AM | Posted IP 162.1*****

No other news agency in India reported this. Tutyonlie looks bigger than BBC.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory