» செய்திகள் - விளையாட்டு » உலகம்
செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது நாசாவின் ரோவர் : அதிபர் ஜோ பைடன் வாழ்த்து
சனி 20, பிப்ரவரி 2021 9:02:02 AM (IST)
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கியதை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
பெர்சவரன்ஸ் ரோவர் ஜி.எம்.டி நேரப்படி சரியாக நேற்று (பிப்.,18, வியாழக்கிழமை) இரவு 20.55 செவ்வாயில் தரையிறங்கியது. செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து புதிய ரோவர் எடுத்த முதல் புகைப்படத்தையும் பெர்சிவரன்ஸ் ரோவர் அனுப்பியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசாவின் மணி மகுடங்களில் ஒன்றாய் மாறி இருக்கிறது, பெர்செவரன்ஸ் ரோவர்.
இது செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக போய் இ்றங்கி இருக்கிறது. செவ்வாய் கிரகத்துக்கு நாசா விண்கலத்தை அனுப்புவது ஒன்றும் புதிது அல்ல. அந்த வகையில் இந்த பெர்செவரன்ஸ் ரோவர், 9-வது விண்கலம். ஒரு கார் அளவிலான இந்த விண்கலம், புளுட்டோனியம் கொண்டு இயங்கக்கூடியது. இது செவ்வாய் கிரகத்தின் மத்திய ரேகை பகுதியில் அமைந்துள்ள ஜெசெரோ கிரேட்டர் என்ற பள்ளத்தில் நேற்று போய் தரை இறங்கி உள்ளது.
6 சக்கரங்களை கொண்ட இந்த ரோவர், செவ்வாயில் போய் இறங்கி, அதற்கான சமிக்ஞையை பூமிக்கு அனுப்புவதற்கு ஆன நேரம் சுமார் 11 நிமிடம். "ரோவர், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சென்று அடைந்து விட்டது உறுதியாகி இருக்கிறது. அது கடந்த கால வாழ்க்கையின் அறிகுறிகளை தேட தயராகி இருக்கிறது” என்ற வெற்றி தகவலை ரோவரின் கட்டுப்பாட்டாளரான இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி சுவாதி மோகன் அறிவிக்கவும், கலிபோர்னியா மாகாணத்தில் பசடீனாவில் உள்ள நாசாவின் ஜெட் புரபல்சன் ஆய்வுக்கூடத்தில் உள்ள கட்டுப்பாட்டாளர்கள் கண்டு ஆனந்தக்கூத்தாடினார்கள்.
பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் போய் இறங்கி இருக்கிறது என்றால் இதில் மிக முக்கிய பங்களிப்பு இந்த சுவாதி மோகனுக்குத்தான். சுமார் ஒரு டன் எடையுள்ள இந்த பெர்செவரன்ஸ் ரோவர் அதிநவீனமானது. இதில் 25 கேமராக்கள், 2 மைக்ரோபோன்கள், துளையிடும் கருவி உள்ளிட்ட பல கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ரோவர் ஒரு மினி ஹெலிகாப்டரையும் எடுத்துச்சென்றிருக்கிறது. இதுதான் மற்றொரு உலகில் இயங்கும் முதல் ஹெலிகாப்டராக இருக்கும்.
நாசாவால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலங்களில் எல்லாம் மிகவும் பெரியது, அதிநவீனமானதும் இந்த பெர்செவரன்ஸ்தான். அடுத்த 2 ஆண்டுகள் இந்த ரோவர், செவ்வாயில் தன் ஆளுகையை செய்யும். தனது 7 அடி நீள கரம் கொண்டு இது செவ்வாயில் உள்ள பாறைகளை துளையிடும். மாதிரிகளை சேகரிக்கும். இந்த மாதிரிகள் சிறிய குப்பிகளில் வைத்து ‘சீல்’வைக்கப்பட்டு செவ்வாயில் பத்திரப்படுத்தப்படும். மற்றொரு விண்கலத்தால் அவை பூமிக்கு கொண்டு வரப்படும். 2031-ம் ஆண்டுக்குள் அவற்றை பூமிக்கு கொண்டு வர இலக்கு நி்ர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனைக்கொண்டு செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதை ஆராய முடியும். செவ்வாயில் 3 பில்லியன் அல்லது 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் பாய்ந்து இப்போதும் அது தொடர்கிறபோது, அங்கு உயிரினங்கள் வாழ்ந்து இருக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக உள்ளது. பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய்க்கு போன வேகத்திலேயே தன் வேலையை செய்யத் தொடங்கி விட்டது. செவ்வாய் கிரகத்தின் 2 கருப்பு வெள்ளை படங்களை எடுத்து அனுப்பி உள்ளது. ஒரு படத்தில் ரோவரின் நிழல் தோற்றம் தெரிகிறது. அடுத்த வாரம் இன்னும் கூடுதலான படங்களை பெர்செவரன்ஸ் ரோவர் எடுத்து அனுப்பும் என்று நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அதிபர் ஜோ பைடன் வாழ்த்து:
பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கியதை அடுத்து அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில், "நாசா விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து. பெர்சிவரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்கியது ஒரு வரலாற்றுத் தருணம். அனைவரின் கடின உழைப்புமே இந்த வரலாற்றை சாத்தியமாக்கியுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் அறிவியல் ஆற்றலால் எதுவும் சாத்தியம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கதிரியக்க பொருட்கள்: ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் இருந்துசீன கப்பல் வெளியேற இலங்கை அரசு உத்தரவு
வியாழன் 22, ஏப்ரல் 2021 12:47:14 PM (IST)

ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலை வழக்கில் காவல்துறை அதிகாரி குற்றவாளி: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 21, ஏப்ரல் 2021 10:23:12 AM (IST)

இந்தியாவுக்கு பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமெரிக்கா அறிவுறுத்தல்
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 5:27:08 PM (IST)

போரிஸ் ஜான்ஸனின் இந்திய வருகை ரத்து: பிரிட்டன் பிரதமர் அலுவலகம் அறிவிப்பு
திங்கள் 19, ஏப்ரல் 2021 4:30:42 PM (IST)

இந்தியாவுடனான அனைத்து விமான சேவைகளும் ரத்து - ஹாங்காங் அரசு அறிவிப்பு
திங்கள் 19, ஏப்ரல் 2021 11:18:04 AM (IST)

பிரான்ஸ் நாட்டிற்கு எதிரான போராட்டம் எதிரொலி : பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்
வெள்ளி 16, ஏப்ரல் 2021 3:44:03 PM (IST)
