» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விமான விபத்தில் இருந்து தப்பியது எப்படி? உயிர் பிழைத்த ஒரே பயணி பேட்டி!

வெள்ளி 13, ஜூன் 2025 3:16:36 PM (IST)



நான் உயிருடன் இருப்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்று விமான விபத்தில் உயிர் பிழைத்த பயணி தெரிவித்தார்.

ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான டிரீம்லைனர் விமானம் (போயிங் 787) (AI-171) ஒன்று லண்டனுக்கு நேற்று மதியம், 23-வது ஓடுபாதையில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர்.

புறப்படுவதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் முடிந்ததும், சரியாக 1.39 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டது. விமானத்தை சபீர் சபர்வால் என்ற விமானி ஓட்டினார். அவருக்கு துணையாக கிளைவ் குந்த் என்ற துணை விமானியும் இருந்தார். அந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களில், அதாவது தரையில் இருந்து 825 அடி உயரத்தை எட்டியபோது, விமானியிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு 'மே டே அழைப்பு' எனப்படும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலையிலான அவசர அழைப்பு வந்தது.

அதை ஏற்றுக்கொண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அதற்குள் விமானத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சில நிமிடங்களில் அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய விபத்தில் சிக்கி 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுமட்டுமல்லாது, மாணவர் விடுதி கட்டிடத்தில் இருந்தவர்களில் 7 பேர் இறந்துனர்க 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

தற்போது, அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விமானத்தில், 169 இந்தியப் பயணிகள், 61 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் 2 பைலட்டுகள், விமானப் பணியாளர்கள் 10 பேர் என மொத்தம் 242 பேர் இருந்தநிலையில் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த விமான விபத்தில் ஒரு அதிசய நிகழ்வாக, அந்த விமானத்தில் பயணித்த விஷ்வாஸ் குமார் என்ற பயணி ஒருவர், விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பினார். காயத்துடன் தப்பிய அவர், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நான் உயிருடன் இருப்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்று விமான விபத்தில் தப்பிய ஒரே நபரான விஸ்வாஸ் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளரிடம் தனது கொடூரமான அனுபத்தை பகிர்ந்து கொண்ட அவர் கூறியதாவது: எல்லாம் என் கண்முன்னே நடந்தது. நான் உயிருடன் தப்பித்ததை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. சீட் உடைந்து தனியாக வந்ததால் அவசர வழி வழியாக உயிர் தப்பினேன். புறப்பட்ட 30 விநாடிகளில் பெரும் சத்தத்துடன் விமானம் விழுந்து நொறுங்கியது.

எனது இருக்கை, 11-A, நான் அமர்ந்திருந்த பக்கம் விடுதிப் பக்கத்தில் இல்லை, அது விடுதியின் தரைத் தளம். மற்றவற்றைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் அமர்ந்திருந்த இடத்தில் அந்தப் பகுதி தரைத் தளத்தில் விழுந்தது, கொஞ்சம் இடம் இருந்தது. என் கதவு உடைந்தவுடன், கொஞ்சம் இடம் இருப்பதைக் கண்டேன், பின்னர் நான் வெளியே வர முயற்சித்தேன்,

அதன்பிறகு நான் வெளியே வந்தேன். எதிர் பக்கத்தில் ஒரு கட்டிடச் சுவர் இருந்தது, விமானம் அந்தப் பக்கத்தில் முழுவதுமாக மோதியிருந்தது, அதனால் அந்தப் பக்கத்திலிருந்து யாரும் வெளியே வர முடியவில்லை. நான் இருந்த இடத்தில் மட்டுமே இடம் இருந்தது. நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்டபோது, என் இடது கையும் எரிந்தது. பின்னர் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

இதெல்லாம் என் கண் முன்னே நடந்தது. நான் எப்படி காப்பாற்றப்பட்டேன் என்று என்னால் நம்பவே முடியவில்லை. உதாரணமாக, நானும் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, நான் உயிருடன் இருந்தேன். நான் என் சீட் பெல்ட்டைக் கழற்றிவிட்டு அங்கிருந்து தப்பித்தேன். விமானத்தில் என்னைச் சுற்றிலும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உடல்கள் சிதறிக் கிடந்தன.

விமானம் புறப்பட்ட பிறகு, 5-10 வினாடிகள், எல்லாம் சிக்கிக் கொண்டது போல் உணர்ந்தோம். விமானத்தில் பச்சை மற்றும் வெள்ளை விளக்குகள் இயக்கப்பட்டன. புறப்படுவதற்காக விமானத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன், அது விடுதியின் கட்டிடத்தில் மோதியது. இதெல்லாம் என் கண் முன்னே நடந்தது. இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி என்னிடம் கேட்டார். இங்குள்ளவர்கள் என்னை நன்றாக நடத்துகிறார்கள். இங்குள்ளவர்கள் மிகவும் நல்லவர்கள் இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education

New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory