» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆமதாபாத் விமான விபத்து: மீட்பு பணிகளை பிரதமர் மோடி ஆய்வு!

வெள்ளி 13, ஜூன் 2025 10:17:24 AM (IST)



ஆமதாபாத்தில் விமான விபத்தில் நடந்த இடத்தில் மீட்பு பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா விமானம் ஒன்று லண்டனுக்கு நேற்று மதியம் 1.39 மணிக்கு 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேருடன் புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களில், அதாவது தரையில் இருந்து 825 அடி உயரத்தை எட்டியபோது, விமானியிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு 'மே டே அழைப்பு' எனப்படும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலையிலான அவசர அழைப்பு வந்தது.

அதை ஏற்றுக்கொண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அதற்குள் விமானத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சில நிமிடங்களில் அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதில் இருந்து எழுந்த தீப்பிழம்புகளும், கரும்புகையும் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவர்களுக்கும் நன்றாக தெரிந்தது.

உடனடியாக விமான நிலைய தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீப்பிழம்பு வந்த திசை நோக்கி விரைந்தனர். அந்த விமானம், விமான நிலையம் அருகே உள்ள மெகானி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த பி.ஜே. தனியார் மருத்துவக் கல்லூரியின் விடுதிக்கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறி இருந்தது பின்னர் தெரியவந்தது.

விமானத்தின் வால் பகுதி, அந்த பகுதியில் இருந்த குடியிருப்பு கட்டிடத்தில் புகுந்த நிலையில் இருந்தது. மற்ற பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. எங்கு பார்த்தாலும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.

பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானம் விழுந்து கிடந்த பகுதியை நெருங்குவதற்கே மீட்பு படையினர் மிகுந்த சிரமப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் ஒருபுறம் தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுப்படுத்தினர். விமானத்தின் பெரும்பகுதி தீயில் முற்றிலும் எரிந்துவிட்டன.

பயணிகள் உள்பட பலர் உடல் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காணமுடியாமல் இருந்தது. இந்த நிலையில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கோர சம்பவத்தில், விஷ்வாஸ் குமார் என்ற பயணி ஒருவர் மட்டும் உயிர் தப்பினார் என்றும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் குஜராத் முதல்-மந்திரி பூபேந்தர படேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். விபத்து குறித்து அறிந்ததும் பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரி பூபேந்தர படேலுடன் பேசி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஆமதாபாத் புறப்பட்டுச் சென்றார். பின்னர் ஆமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்திற்கு அவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கோர விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் தகவல்களை ஆராய்ந்து பார்த்தால்தான், கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதும், விபத்துக்கான காரணமும் தெரியவரும். எனவே அந்த கருப்பு பெட்டியை கைப்பற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நெஞ்சை பிளக்கும் வகையில் நடந்த இந்த விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட இன்று குஜராத்தின் ஆமதாபாத்திற்கு வருகை தந்துள்ளார். விமானம் உருக்குலைந்து கிடக்கும் இடத்தில் நடக்கும் மீட்பு பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

அவருடன் குஜராத் முதல்-மந்திரி பூபேந்தர படேல், விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு உள்ளனர். முன்னதாக ஆமதாபாத் விமான நிலையத்தில் பார்வையிட்ட பிரதமர் மோடி அதிகாரிகளுடன் பேசினார். விமான சேவைகள் வழக்கம் போல் செயல்படுவதாக பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education





New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory