» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெஹுலி 24பேர் கொலை வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை: 44 ஆண்டுக்குப் பின் தீர்ப்பு

புதன் 19, மார்ச் 2025 10:24:38 AM (IST)



பட்டியலின மக்கள் 24பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 44 ஆண்டு காலமாக நடந்து வந்த இந்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி அன்று, மாலை 4.30 மணியளவில் காக்கி உடையணிந்த 17 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஊருக்குள் புகுந்தனர். இவர்கள் அங்கிருந்த பட்டியலின மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில், 6 மாத குழந்தை மற்றும் 2 வயதுடைய இரு குழந்தைகள் உள்பட 24 பட்டியலின சமூகத்தினர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நவம்பர் 19ம் தேதி, 1981-ல் உள்ளூரைச் சேர்ந்த லயிக் சிங் என்பவரால் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை, கொள்ளை போன்ற வழக்குகளின் கீழ் குற்றவாளிகள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 14 பேர் வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்திலேயே உயிரிழந்தனர். அப்போதே ஒருவர் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் விரிவான விசாரணையைத் தொடர்ந்து, கொள்ளைக் கும்பலின் தலைவர்கள் சந்தோஷ் மற்றும் ராதே உள்ளிட்ட கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு மெயின்பூர் மாவட்ட கோர்ட்டில் கடந்த 44 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

வழக்கின் வாதங்கள் அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த 12-ந்தேதியன்று, குற்றம் சாட்டப்பட்டு இருந்த கப்டன் சிங் (வயது 60), ராம்பால் (60), ராம் சேவக் (70) ஆகிய 3 பேரையும் குற்றவாளிகள் என்று நீதிபதி இந்திரா சிங் தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் பின்னர் அறிவிப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட, கப்டன் சிங், ராம்பால், ராம் சேவக் ஆகிய 3 பேருக்கும் நீதிபதி தூக்குத்தண்டனை மற்றும் தலா ரூ.50 ஆயிரம் விதித்தார் என்று அரசு வக்கீல் ரோஹித் சுக்லா தெரிவித்தார்.

இந்த படுகொலை சம்பவம் அப்போது உத்தரபிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, உடனடியாக அந்த கிராமத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து திஹுலியில் இருந்து பிரோசாபாத்தில் உள்ள சதுபூர் வரை பாதயாத்திரையாக சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory