» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிபிஐ விசாரணையை முடக்க நில பேரம்: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மீது புகார்

வியாழன் 11, நவம்பர் 2021 12:37:24 PM (IST)

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தனக்கு எதிரான சிபிஐ விசாரணையை முடக்குவதற்காக அதிகாரிகளுடன் நில பேரத்தில் ஈடுபட்டதாக கேரள உயர்நீதிமன்றத்தில் முன்னாள் காவல் அதிகாரி எஸ்.விஜயன் புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன பிரிவில் (இஸ்ரோ) பணியாற்றி கடந்த 2001-ல் ஓய்வு பெற்றவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். கடந்த 1994-ல் இஸ்ரோவின் சில முக்கிய ரகசியங்களை இவர் வெளிநாடுகளுக்கு விற்றதாகவும் அந்த நாடுகளுக்காக உளவு பார்த்ததாகவும் கூறி கேரள போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர், சிபிஐ நடத்திய விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனத் தெரிய வந்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். நம்பி நாராயணன் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதற்கு கேரள காவல் துறையின் 10 அதிகாரிகளே காரணம் எனவும் சிபிஐ தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, உளவு வழக்கில் நம்பி நாராயணனை சிக்க வைத்ததில் போலீஸ் அதிகாரிகளின் பங்கு மற்றும் இஸ்ரோ ரகசிய ஆவணங்கள் விற்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு ஆகியவை குறித்து விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில், கேரள காவல் துறை முன்னாள் அதிகாரி எஸ்.விஜயன் உள்பட 17 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், "முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் தனக்கு எதிரான சிபிஐ விசாரணையை முடக்குவதற்காக அதிகாரிகளுடன் நில பேரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்து முன்னாள் காவல் அதிகாரி எஸ்.விஜயன் சார்பில் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். நாராயண பிஷராதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது விஜயன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நம்பி நாராயணன் சிபிஐ அதிகாரிகளுடன் நில பேரத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரமாக, நம்பி நாராயணனுக்கும் அவருடைய மகனுக்கும் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல ஏக்கர் நிலங்களின் மீதான அதிகாரம் அளித்திருப்பதைக் காட்டும் நிலத்தின் வில்லங்கச் சான்று விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலங்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு விற்கப்பட்டுள்ளன. 

அந்த வகையில், சிபிஐ அதிகாரிகள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட இந்த ஆவணங்களே போதுமானவை' என்று கூறினார். இதைக் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: நிலங்கள் விற்கப்பட்டது வில்லங்கச் சான்றிதழில் நிரூபணமாகவில்லை. எனவே, சரியான நில விற்பனை ஆவணத்தை மனுதாரர் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விசாரணை நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடுவதற்கும், வழக்கு விசாரணைக்கு அனுமதியும் வழங்க வேண்டும்.

மேலும், இந்த விவகாரத்தில் மனுதாரரின் புகாரை மட்டுமே விசாரணை நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. மனுவை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. எனவே, தேவையான அனைத்து ஆவணங்களுடன் புதிய மனுவை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க விசாரணை நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்பதோடு, அந்தப் புகார் தொடர்பாக பதிலளிக்க நம்பி நாராயணன் உள்பட வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று உத்தரவில் நீதிபதி கூறினார்.


மக்கள் கருத்து

adaminNov 11, 2021 - 12:50:02 PM | Posted IP 108.1*****

ivaroda pethiya than naan kalyanam pannalam nu ninachen. pocha.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory