» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வு: வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு

திங்கள் 25, அக்டோபர் 2021 11:52:28 AM (IST)

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் எழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஈராக், சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. எனவே சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் இந்தியாவில் எதிரொலித்து வருகிறது. அதன்படி, சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. இது தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

கரோனாவில் இருந்து உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வருவதால் கச்சா எண்ணெய்க்கான தேவை தற்போது ஏறுமுகமாக உள்ளது. பொது முடக்கங்கள் விலக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை சுமுக நிலைக்கு திரும்பி வருவதால் பெட்ரோல்-டீசலுக்கான பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால் கரோனாவையொட்டி உற்பத்தியை குறைத்துக்கொண்ட எண்ணெய் உற்பத்தி நாடுகள், தற்போது தேவை அதிகரித்த போதும், எண்ணெய் உற்பத்தியை தேவைக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை.

உலகம் முழுவதும் தேவை அதிகரிப்பு மற்றும் விலை உயர்வு போன்ற காரணங்கள் இருந்தபோதும், கணிசமான அளவுக்கு உற்பத்தியை அந்த நாடுகள் அதிகரிக்கவில்லை. இதைப்போல அமெரிக்காவும் தனது எண்ணெய் வினியோகத்தை குறைத்துக்கொண்டு உள்ளது. இந்த காரணிகளால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீப்பாய் ஒன்றுக்கு 85 டாலர் என்ற நிலையை கடந்த வாரம் எட்டியது. இது கடந்த 2018-ம் ஆண்டுக்கு பின் மிகவும் அதிகம் ஆகும்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீது மத்திய-மாநில அரசுகள் அதிக அளவில் வரியும் விதித்து உள்ளன. இது பெட்ரோல்-டீசல் விலையை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்று வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.100-ஐ கடந்து விட்டது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ எட்டி விட்டது. பெட்ரோல்-டீசல் மீது மாநில அரசுகள் விதிக்கும் வரியின் அடிப்படையில் மாநிலத்துக்கு மாநிலம் இவற்றின் விலை மாறுபடுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்தது. இதன் மூலம் அவற்றின் விலை நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. அந்தவகையில் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை ரூ.107.59 ஆக இருந்தது. மும்பையில் ரூ.113.46 ஆகவும், பெங்களூருவில் ரூ.111.34 ஆகவும், சென்னையில் ரூ.104.68 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.108.11 ஆகவும் விற்கப்பட்டது.

இதைப்போல டீசல் விலை டெல்லியில் ரூ.96.32 ஆகவும், மும்பையில் ரூ.104.38 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.99.43 ஆகவும், சென்னையில் ரூ.100.74 ஆகவும் உச்சத்தில் இருந்தது. இந்தியாவில் கடந்த மாதம் 28-ந் தேதிக்கு பின் 21 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரூ.6.40 அதிகரித்து இருக்கிறது. டீசல் விலையும் செப்டம்பர் 24-ந் தேதிக்கு பின் 24 முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் ரூ.7.70 ஏற்றம் கண்டிருக்கிறது.

முன்னதாக கடந்த மே 4 முதல் ஜூலை 17-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.11.44 வரையும், டீசல் விலை ரூ.9.14 வரையும் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலை வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. இது, அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் எழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory