» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் : வெள்ளை அறிக்கை வெளியிட்டார் ராகுல் காந்தி!

செவ்வாய் 22, ஜூன் 2021 4:45:21 PM (IST)

இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது நடவடிக்கை தொடர்பாக வெள்ளை அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

எதிர்வர இருக்கும் கரோனா அலைகளைத் தவிர்க்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும், கரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசு என்ன செய்தது? என்பதை கூறுவதற்காகவேதான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான  ராகுல்காந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தார். கரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவை சுனாமி போல தாக்கும். எனவே, எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

ராகுல் கூறியது போலவே கரோனா தொற்றின் 2-வது அலை பெரிய தாக்குதலை ஏற்படுத்திவிட்டது. மேலும், 3-வது அலை தாக்கப்போகிறது என்று நிபுணர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கரோனா பாதிப்பில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை குற்றம்சாட்டி வெள்ளை அறிக்கை ஒன்றை இன்று நிருபர்கள் மத்தியில்  ராகுல் காந்தி வெளியிட்டார்.

வெள்ளை அறிக்கையில், ‘‘கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே மத்திய அரசு சரியாக செய்யவில்லை. இதனால்தான் பாதிப்பு அதிகமாகிவிட்டது’’ என்று குற்றம்சாட்டி இருந்தார். மேலும் இது சம்பந்தமாக ராகுல் காந்தி கூறியதாவது: மத்திய அரசை குறைகூற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வெள்ளை அறிக்கையை நாங்கள் வெளியிடவில்லை. கரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசு என்ன செய்தது? என்பதை கூறுவதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக 3-வது அலை வரும் என்று கூறுகிறார்கள். அதற்கு மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும். அதற்கு உதவும் வகையிலேயே நாங்கள் இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறோம். இத்துடன் 3-வது அலை தாக்குதல் வரப்போவது பற்றி மக்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இதை வெளியிடுகிறோம். முதல் அலை மற்றும் 2-வது அலை கரோனா வந்த போது அதை அரசு சரியாக கையாளாத காரணத்தால் தான் இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டு விட்டது என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

என்ன காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டது? என்பதை நாங்கள் விளக்க முன்வந்துள்ளோம். கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருவதால், இன்னும் அடுத்தடுத்து கரோனா அலைகள் வரலாம். அதை எதிர்கொள்ள மருந்துகள், ஆக்சிஜன் என அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். கரோனா பாதிப்பு பற்றி கண்ணீர் விடுவதால் மட்டும் எந்த பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

கடந்த கால தவறுகளை மீண்டும் செய்தால், பாதிப்பு தொடரத்தான் செய்யும். சரியாக தயாராக இருந்திருந்தால் 2-வது அலையில் ஏற்பட்ட மரணத்தில் 90 சதவீதத்தை தடுத்து இருக்க முடியும். 1-வது, 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதில் உள்ள இடைவெளியை அதிகப்படுத்தியதில் மத்திய அரசின் சதி இருக்கிறது. தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு காரணமாகத்தான் இடைவெளியை உயர்த்தி இருக்கிறார்கள். நிபுணர்கள் கூறியதால் இடைவெளியை அதிகப்படுத்தியதாக கூறியது தவறு என்றார் ராகுல்காந்தி.

டுவிட்டர் பதிவில் ராகுல்காந்தி செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், ‘கரோனா தொற்றா பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்து இருப்பது கொடூர குணத்தை காட்டுகிறது. மத்திய அரசின் நிவாரணம் என்பது சிறிய அளவுக்காவது உதவியாக இருக்கும். ஆனால் அதை கூட வழங்குவதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. முதலில் கரோனா தாக்கிய போது அதற்கு சரியான சிகிச்சைகளை வழங்க மத்திய அரசு தவறி விட்டது.தவறான தகவல்களை அவர்கள் வெளியிட்டார்கள். இவை மத்திய அரசின் குரூர எண்ணங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது’’ என்று ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamBlack Forest Cakes


Thoothukudi Business Directory