» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அரசின் அனுமதி பெற்று மேகதாதுவில் விரைவில் புதிய அணை கட்டப்படும் : எடியூரப்பா உறுதி!

சனி 19, ஜூன் 2021 12:19:11 PM (IST)

மத்திய அரசின் அனுமதி பெற்று மேகதாதுவில் விரைவில் புதிய அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்தது. இதற்கு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடியூரப்பா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், மேகதாது பகுதியில் ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தோம். அதையடுத்து மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக தென்மண்டல தீர்ப்பாயம், தொடர்ந்து விசாரிக்க தேவை இல்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் அனுமதி பெற்று மேகதாதுவில் விரைவில் புதிய அணை கட்டும் பணி தொடங்கப்படும்" என்றார்.

இதுதொடர்பாக காவல்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், மேகதாது திட்ட இடத்தை ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டது. இதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு கர்நாடகத்திற்கு ஆதரவாக வந்துள்ளது. இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory