» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காவிரி உபரிநீரை தமிழகம் பயன்படுத்தி கொள்ள கர்நாடக அரசு அனுமதிக்காது: எடியூரப்பா

செவ்வாய் 23, பிப்ரவரி 2021 8:55:48 AM (IST)

காவிரி உபரிநீரை தமிழகம் பயன்படுத்தி கொள்வதற்கு கர்நாடக அரசு அனுமதி அளிக்காது என்று முதல்-அமைச்சர்  எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், ரூ.14,400 கோடி செலவில் காவிரி, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் விதமாக நதிகள் இணைப்பு திட்டத்தை நேற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலக்கும் நிலை இருந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு, காவிரி ஆற்றின் உபரி நீரை வறட்சியின் பிடியில் சிக்கி இருக்கும் தமிழக தென் மாவட்டங்களுக்கு திருப்பிவிடும் விதமாக இந்த நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள காவிரி, வைகை, குண்டாறு ஆகிய 3 நதிகளையும் இணைக்கும் திட்டத்திற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் முதல்-அமைச்சர்  எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

"காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த கர்நாடகம் ஒருபோதும் அனுமதிக்காது. அதற்கான வாய்ப்பே இல்லை. காவிரியில் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக நீரை வழங்கவும் சாத்தியமில்லை. எனது தலைமையிலான அரசு, அதற்கு வாய்ப்பளிக்காது. காவிரி நதிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி தமிழ்நாடு நடந்து கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் அவர்கள் கூறும் கருத்துகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூற வேண்டும் என்பது அவசியமில்லை. இதனால் யாருக்கும் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்படி எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு எடுக்கும். இது தொடர்பாக யாரும் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை. காவிரி நதிநீர் பிரச்சினையில் தற்போதைக்கு அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.” இவ்வாறு முதல்-அமைச்சர்  எடியூரப்பா கூறினார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிFeb 23, 2021 - 09:49:55 AM | Posted IP 108.1*****

அதே போல காவேரி உபரி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டால் நடப்பதே வேறு என்று சொன்னால் என்ன செய்வாய்? உனது மாநில தலைநகரம் காவேரி உபரி நீரில் மூழ்கி அழிந்து போகும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest Cakes

Thalir Products

Thoothukudi Business Directory