» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

புதுவையில் தி.மு.க. ஆட்சி உதயமாகும்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

திங்கள் 12, டிசம்பர் 2022 5:45:12 PM (IST)



புதுவையில் நிச்சயமாக மீண்டும் திராவிட மாடல் ஆட்சி உதயமாகும். அதில் யாரும் சந்தேகப்பட வேண்டாம் என தமிழக முதல்வல் மு.க.ஸ்டாலின் பேசினார்.

புதுவை மாநில முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாநில அவைத் தலைவருமான எஸ்.பி. சிவக்குமார் - சித்ரா சிவக்குமார் ஆகியோரின் மகன் திருமணம் பட்டானூர் அருகே உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (திங்கட்கிழமை) நடந்தது. திருமணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி தாலி எடுத்து கொடுத்தார். தொடர்ந்து மணமக்கள் முதலமைச்சர் ஸ்டாலின்-துர்கா ஸ்டாலின் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். 

விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உதயசூரியன் ஆட்சி மலர்ந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி என பெருமையோடு சொல்கிறோம். அப்படிபட்ட திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு வருவது எளிதுதான். உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் அந்த ஆசை உண்டு. கடந்த சட்டமன்ற தேர்தலில்கூட வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனால் போய்விட்டது. புதுவையில் தற்போது ஒரு ஆட்சி நடந்து வருகிறது. அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான். 

முதலமைச்சர் ஒருவர் உள்ளார், உயர்ந்த மனிதர்தான், உயரத்தில். ஆனால் அடிபணிந்து கிடக்கிறார். அவர் நல்லவர்தான், குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் நல்லவர் வல்லவராக இருக்க வேண்டாமா? புதுவையில் கவர்னர் ஆட்டிப்படைக்கும் வகையில் ஆட்சி நடந்தால் வெட்கப்பட வேண்டாமா? வெகுண்டு எழ வேண்டாமா? அடங்கி, ஒடுங்கி ஒரு ஆட்சி நடப்பது புதுவை மாநிலத்துக்கு மிகப்பெரும் இழுக்காக உள்ளது. ஏதாவது ஒரு நன்மை நடந்துள்ளதா? இல்லை. இதனால்தான் நம் ஆட்சி வரவேண்டும் என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். 

புதுவையில் ஏற்கனவே ராமச்சந்திரன், ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வின் ஆட்சி நடந்துள்ளது. நிச்சயமாக மீண்டும் புதுவையில் திராவிட மாடல் ஆட்சி உதயமாகும். அதில் யாரும் சந்தேகப்பட வேண்டாம். வைத்திலிங்கம் காங்கிரஸ் முதலமைச்சராக கூட்டணி ஆட்சி நடக்கவில்லையா? நாராயணசாமி நம்மோடு இணைந்து கூட்டணி ஆட்சி நடக்கவில்லையா? எந்த ஆட்சி நடந்தாலும் புதுவையில் மதவாத ஆட்சி உருவாகிவிடக்கூடாது என்பதில் கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும்.

புதுவையில் விரைவில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளீர்கள். தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு பணியினை தொடங்குங்கள் என கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் சமயத்தில் யாரோடு கூட்டணி என்பதை முடிவு செய்வோம். வெற்றிக்கு அச்சாரமாக நாம் தற்போதே பணியாற்ற தொடங்க வேண்டும். அனைவரும் இது குடும்ப விழாவாக நடக்கிறது என கூறினர். இதைத்தான் அண்ணா, அனைவரையும் தம்பி, தம்பி என்றார். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை அனைவரையும் ஒன்று சேர்த்து உடன்பிறப்பே என கலைஞர் அழைத்தார். அவர்கள் வழியில் உங்களை வழிநடத்தும் பொறுப்பேற்றுள்ள நான் உங்களில் ஒருவனாக கடமையாற்றி வருகிறேன்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் எந்த சூழலிலும் உங்களோடு ஒருவனாக இணைந்து நின்று பணியாற்ற காத்திருக்கிறேன். சிவக்குமார் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதது. அவரின் இல்ல விழா நம் விழாவாக கருதுகிறோம். உங்களோடு சேர்ந்து நானும் மணமக்களை வாழ்க, வாழ்க என வாழ்த்துகிறேன். புரட்சிக்கவிஞர் கூறியபடி, வீட்டுக்கு விளக்காய், நாட்டுக்கு தொண்டர்களாய் வாழுங்கள் என வாழ்த்துகிறேன். பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்பெயர் சூட்டுங்கள் என மணமக்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory