» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதிப்பு : கே.எஸ்.அழகிரி பேட்டி

திங்கள் 23, மே 2022 4:57:21 PM (IST)

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்ற பேரறிவாளனை காந்தி குடும்பத்தினர் பெருந்தன்மையாக மன்னித்துள்ளனர். ஆனால் மக்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. தன்னை சுட்ட கோட்சேவை மன்னிக்கும்படி மகாத்மா காந்தி கூறினார். ஆனால் சட்டம் அவரை தூக்கில் போட்டது.

அதுபோன்றுதான் பேரறிவாளனை விடுவித்ததை எங்களால் ஏற்க இயலாது. தமிழர் என்பதற்காக அவரை விடுவிக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. கொலை செய்த ஒருவரை நாம் விடுவிக்கலாமா? தமிழ்நாட்டில் கொலை-கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட சுமார் 500 முதல் 600 பேர் வரை 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில்களில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அவர்களும் தமிழர்கள்தான்.

ராஜீவ் கொலை கைதிகள் மேலும் 6 பேரை விடுவிக்க முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள். அப்படியானால் 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களையும் விடுவிக்க வேண்டியதுதானே? அவர்கள் மீதான குற்றச்சாட்டு இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. அவர்களை ஏன் விடுவிக்கக் கூடாது? நியாயம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.

இதையெல்லாம் உணர்ந்துதான் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உருவானது. இத்தகைய முரண்பாடு இருப்பது எல்லோருக்கும் தெரியும். என்றாலும் தி.மு.க. தரப்பிலும் எங்களுடன் கூட்டணியை தொடர்ந்தனர். இந்த கொள்கை முரண்பாடுகள் கூட்டணியை ஒருபோதும் சிதைத்தது இல்லை. பொது எதிரியை வீழ்த்துவதற்காக மாறுபட்ட கொள்கையை கொண்ட கட்சிகள் ஓர் அணியில் திரள்வது இயல்பானதுதான். அந்த வகையில் மதசார்பின்மை என்பதுதான் எங்கள் கூட்டணியின் ஒரே இலக்கு. 

இந்நிலையில் கொலை குற்றம் செய்தவரை வரவேற்பது ஆச்சரியமாக உள்ளது. தமிழக காங்கிரசுக்கு நான் தலைவரான பிறகு பல்வேறு கருத்து மோதல்கள் எழுந்தது உண்டு. ஆனால் அதை நான் ஊக்கப்படுத்தியது இல்லை. அதனால்தான் பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு 72 சதவீத வெற்றி கிடைத்தது. எனது அனுபவத்தை பொறுத்தவரை ஒரு கட்சி வெற்றி பெறுவதற்கு செல்வாக்கு பெற்று இருக்க வேண்டும் என்பது இல்லை. அந்த செல்வாக்கை வாக்குகளாக மாற்றும் திறன் இருந்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். 1991-ம் ஆண்டு எங்களுக்கு அபரிமிதமான செல்வாக்கு இருந்தது. ஆனால் அதை அ.தி.மு.க. அறுவடை செய்தது.

கூட்டணி என்பது கட்சியை மேலும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆனால் தமிழகத்தில் உருவான அரசியல் கூட்டணிகள் தமிழக காங்கிரசை வளர்ச்சி பெற செய்ய முடியாமல் செய்து விட்டன. தமிழகத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணிகள் கட்சியை பலவீனப்படுத்தி விட்டது என்பதே உண்மை. கூட்டணி அரசியல் காங்கிரசின் வளர்ச்சியை குறைத்து பாதித்து விட்டது. காங்கிரஸ் உரிய வளர்ச்சி பெறவில்லை. ஒரு கூட்டணி வலுவாக இருந்தால் கட்சியையும் அது வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். இது சொல்வதற்கு எளிது. செயல்படுத்துவதற்கு கடினமாகும்.

தமிழகத்தில் காங்கிரசை வளர்க்க மிகப்பெரிய தியாகம் செய்ய வேண்டும். சில தேர்தல்களில் நாம் தோற்க நேரிடலாம். மக்கள் உடனடியாக நமக்கு ஓட்டு போட்டு விட மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி தனித் தன்மையுடன் வலிமையாக இருந்தால் மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள். தனி நபர்கள் தங்கள் சொந்த நலனை கருத்தில் கொண்டு செயல்படக் கூடாது. அப்படி செயல்பட்டால் அது அவர்க ளுக்கு தோல்வியைத்தான் தரும்.

தமிழகத்தில் பல கட்சிகள் தோன்றி உள்ளன. சிறந்த பேச்சாளர்கள் அவற்றில் இருந்தனர். மணிக்கணக்கில் பேசுபவர்கள் கூட இருந்தார்கள். ஆனால் எல்லோராலும் வெற்றி பெற இயலவில்லை. காங்கிரசின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான விஷயங்களுக்கு திட்டமிட வேண்டும். இலக்கு நிர்ணயிக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். அதன்பிறகுதான் காங்கிரஸ் தமிழகத்தில் வளர்ச்சிப் பெற மக்கள் உதவி செய்வார்கள். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.


மக்கள் கருத்து

sankarமே 29, 2022 - 09:26:53 AM | Posted IP 162.1*****

yes congress had lost their platform rightly at 1972 when Mrs.Indira made alliane with dmk's karunanidhi - now congress is in their last bed all over India - what to do?

MAKKALமே 24, 2022 - 02:35:34 PM | Posted IP 162.1*****

காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் என்ற கட்சியே இல்லை. தனியாக இருந்தால் உங்களுக்கு செல்லாத ஒட்டு கூட கிடைக்காது. உங்களுக்கு ஏற்ற ஜோடி திமுகதான். அல்லது கோமாளி செபாஸ்டியன் கூட கூட்டு வைத்து கொள்ளுங்கள் ராகுல் + செபாஸ்டியன் சூப்பர் JOKERS......

ஆனந்தன்மே 24, 2022 - 11:47:12 AM | Posted IP 162.1*****

2ஜியில் உங்களை ஏமாற்றி கொள்ளை அடித்து உங்களுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்தவர்களிடம் கூட்டணி வைக்கலாம்? அப்போது யோசிக்காமல் இப்போது யோசித்து என்ன பயன் எல்லாம் முடிந்துவிட்டது. கண் கெட்ட பின்னர் இப்போது சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன ஆகப்போது

தமிழன்மே 24, 2022 - 11:35:25 AM | Posted IP 162.1*****

இந்தியாவில் வேகமாக மூழ்கி கொண்டிருக்கும் கட்சி காங்கிரஸ். தி.மு.க.வில் இருந்து விலகினால் சீக்கிரம் மூழ்கிவிடும்.

உண்மை தமிழன்மே 24, 2022 - 06:46:57 AM | Posted IP 162.1*****

அப்படி சொல்லாதீங்க, திருடர்களிடம் கூட்டணி அப்படி சொல்லுங்க அதுதான் பொருத்தமாக இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital

Thoothukudi Business Directory