» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மு.க.ஸ்டாலின் தொடங்கிய அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பிற்கு வைகோ ஆதரவு!

வியாழன் 10, பிப்ரவரி 2022 4:21:41 PM (IST)

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிய அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளால் பின்பற்றப்படும், சமூகநீதிக் கொள்கையைப் பின்பற்றி பிற்படுத்தப்பட்ட - பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு போன்ற நலன்களைப் பாதுகாக்க 'அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு' தொடங்கப்படும் என்று குடியரசு தினத்தன்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டாா்.

அதன்படி, இந்தக் கூட்டமைப்பில் நாடு முழுக்க உள்ள தலைவா்களை இணைக்கும்பொருட்டு அவர்களுக்கு கடிதமும் எழுதினாா். தேசிய அளவில் முக்கியக் கட்சிகளின் தலைவா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுகவின் பொருளாளரும் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆா்.பாலு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். 

அதன் அடிப்படையில் அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக முன்னாள் அமைச்சா் வீரப்ப மொய்லியை நியமித்து திமுக தலைவருக்கு சோனியா காந்தி பதில் கடிதமும் எழுதியுள்ளாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோரும் இந்த அமைப்பிற்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், தமிழக முதல்வர் தொடங்கிய அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதியாக, கழகத்தின் தேர்தல் பணிச் செயலாளர் வழக்கறிஞர் ஆவடி அந்தரிதாஸ் செயல்படுவார் எனவும் கூறியுள்ளார். மேலும், முதல்வரின் இந்த முயற்சிகளுக்கு வரவேற்பையும், வாழ்த்தையும் தெரிவித்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory