» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தி.மு.க. அரசின் இயலாமையால் சென்னையில் மழை வெள்ளம் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சனி 1, ஜனவரி 2022 12:17:53 PM (IST)

எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது கூறியிருக்கும் யோசனைகளை, இந்த 8 மாதங்களில் செயல்படுத்தி இருந்தால் கூட, இந்த 3 உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.

மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு எதிர்க்கட்சிகளை குறைகூறாமல், உண்மையான அக்கறையுடன் மக்கள் நலப் பணிகளில் தி.மு.க. அரசு ஈடுபட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. அரசு, மே மாதமே ஆட்சிப் பொறுப்பை ஏற்றும், வடகிழக்குப் பருவமழை குறித்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சரியான அறிவுரைகள் வழங்கப்படவில்லை என்றும், முக்கியமாக சென்னையில் பணிபுரிந்த அதிகாரிகளை முழுவதுமாக பணியிட மாறுதல் செய்ததன் விளைவாக, ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகளை எனது முந்தைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

ஒரு நாள், பிற்பகல் முதல் பெய்த கனமழையால் சென்னையில் மட்டும் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த மூவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியினை வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.

வடகிழக்குப் பருவமழை 20 நாட்களுக்கு முன்பு சிறிதளவு ஓய்ந்திருந்தது. அப்போதாவது பழுதடைந்த மின் உபகரணங்கள், சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைத்திருந்தால் இந்த பாதிப்புகளைத் தவிர்த்திருக்கலாம். மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருக்கும் யோசனைகளை, இந்த 8 மாதங்களில் செயல்படுத்தி இருந்தால் கூட, இந்த 3 உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். 

மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளையும் தவிர்த்திருக்கலாம். சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி விலகச் சொன்ன இன்றைய முதல்-அமைச்சர், தற்போது தி.மு.க. அரசின் மின்சாரத் துறை அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்லுவாரா?.

தற்போதைய இந்த அரசு, நீட்டுக்காக ஒரு கமிட்டி; வெள்ளச் சேதங்களால் பாதிப்படையாமல் இருக்க ஆய்வு செய்து அறிக்கை வழங்க ஒரு குழு; நிதி மேலாண்மைக்கு ஒரு குழு என்று, குழுக்கள் அமைப்பதைப் பார்க்கும்போது, தி.மு.க. அரசு, தனது முன்னாள் தலைவர் எப்படி விசாரணை ஆணையங்களை அமைத்து பிரச்சினைகளை திசை திருப்பினாரோ, அதுபோல் இந்த அரசும் குழுக்களை அமைத்து பிரச்சினைகளை திசை திருப்புகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இனியாவது, தங்களது இயலாமையால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு எதிர்க்கட்சிகளைக் குறைகூறாமல், மக்கள் நலப் பணிகளில் உண்மையான அக்கறையுடன் ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory