» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

புதன் 15, டிசம்பர் 2021 5:31:03 PM (IST)

தி.மு.க. ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்படி பழனிம்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க .அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் .பின்னர் அவர்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் மக்களை திசை திருப்பும் வகையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தி.மு.க. அரசு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளை நடத்தி வருகிறது. 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக சார்பில் 525 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதில் மூன்று, நான்கு தவிர வேறு எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, நீட் தேர்வு ரத்து, முதியார் உதவித் தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உயர்வு என்பது போன்ற எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. 

பெட்ரோல் டீசல் விலைகுறைக்கப்படும் என வாக்குறுதி அளித்து விட்டு பெட்ரோலுக்கு மட்டும் சிறிதளவு விலை குறைத்தார்கள். டீசலுக்கு குறைக்கவேயில்லை. இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலை குறைத்தபோதிலும் தி.மு.க. அரசு குறைக்கவில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை மறைப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறது. 

அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற திமுக அரசு மக்களை திசை திருப்பும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ரெய்டு நடத்தி வருகிறது. இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் மூலம் அதிமுகவை அசைத்து விட முடியாது. இந்த வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம்.அ.தி.மு.க. வீழ்ந்து விடும் என நினைத்தார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நல்லாசியுடன் அ.தி.மு.க. வளர்ந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் மட்டும் 37 இடங்களில் அதிமுக உட்கட்சித் தேர்தல் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. 

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான். தி.மு.கவைச் சேர்ந்த 13-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அந்த வழக்குகளில் எந்த நடவடிக்கையும் இல்லை.தமிழகத்தில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருக்கிறது. நல்ல நிர்வாகம் இல்லாத காரணத்தால் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மே மாதம் ஆட்சிக்கு வந்த நிலையில், வடகிழக்கு பருவமழைக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வில்லை. சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு லஞ்சம் கேட்கப்பட்டால், ஒப்பந்ததாரர்கள் பணியை நிறுத்தி விட்டனர். இதனாலேயே பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் சென்னை மாநகராட்சியில் ஒரே நேரத்தில் 160 பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்துவிட்டனர். அனுபவமில்லாத பொறியாளர்களால் தண்ணீர் எங்கு தேங்கும் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெரியாமல் போய்விட்டது.

வரும் 17-ம் தேதி அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அதை முடக்குவதற்காக இதுபோன்ற ரெய்டு நடத்துகிறார்கள்.  அ.தி.மு.க கொண்டு வந்த திட்டங்களை முடக்கி வருகிறார்கள்.நாட்டு மக்களைப் பற்றி எந்த கவலையும் தி.மு.க. அரசுக்கு இல்லை என கூறினார்.


மக்கள் கருத்து

HORNDec 16, 2021 - 03:30:34 PM | Posted IP 162.1*****

உண்ம, இதில் யாரு முதலிடம்

உண்மDec 16, 2021 - 10:20:54 AM | Posted IP 59.92*****

இரண்டு கட்சிகளும் மாறி மாறி குறை சொல்லி கொண்டே மக்கள் கண்களில் மண்ணை தூவி விட்டு, கொள்ளையடித்து இருப்பார்கள், நம் நாட்டில் 2 திராவிட கட்சிகளும் வேண்டாதவைகளே...

truthDec 16, 2021 - 08:34:59 AM | Posted IP 162.1*****

evidence irunthal case podunga.

PitchaiahDec 15, 2021 - 07:28:24 PM | Posted IP 157.4*****

தலைவரே....! தலைவரே....! Super தலைவரே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory