» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் 3 ஆண்டு போட்டியிட தடை: ஆணையம் அறிவிப்பு
செவ்வாய் 19, அக்டோபர் 2021 11:00:13 AM (IST)
தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் 3 ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள், ஏனைய 28 மாவட்டங்களில் காலி இடங்களுக்கு போட்டியிட்டவர்கள் தேர்தல் செலவு கணக்கை உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என்று ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கின் உண்மை நகலினை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர்கள் மாவட்ட ஊராட்சி செயலாளரிடமும், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடமும், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் தாக்கல் செய்ய வேண்டும்.
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் இது பொருந்தும். தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்தவர்கள் அதற்கான ஒப்புதல் சீட்டை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொண்டு வரும்காலங்களில் 3 ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவர்கள் ஆக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.