» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

பண்டிகை காலங்களில் தனியார்‌ பஸ்களில் அபரிமிதமான கட்டணம் வசூல் : ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

செவ்வாய் 12, அக்டோபர் 2021 3:04:08 PM (IST)

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் தனியார்‌ பேருந்துகளில்‌ வசூலிக்கப்படும்‌ அபரிமிதமான கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள‌ அறிக்கை: பொங்கல்‌ பண்டிகைக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தின்‌ பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களைக்‌ கொண்ட பண்டிகை ஆயுத பூஜை. அதுவும்‌ இந்த ஆண்டு அக்டோபர்‌ 14ஆம்‌ நாள்‌ வியாழக்கிழமை அன்று ஆயுத பூஜை என்பதாலும்‌, அக்டோபர்‌ 15ஆம்‌ நாள்‌ வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி என்பதாலும்‌, அதற்கு அடுத்த நாட்களான சனிக்கிழமை மற்றும்‌ ஞாயிற்றுகிழமை விடுமுறை நாட்கள்‌ என்பதாலும்‌, 19ஆம்‌ தேதி செவ்வாய்க்கிழமை மிலாடி‌ நபி பண்டிகை என்பதாலும்‌, பண்டிகை மற்றும்‌ விடுமுறை நாட்களை முன்னிட்டு வெளியூர்களில்‌ பணிபுரிபவர்கள்‌ தங்கள்‌ சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்தினருடன்‌ பண்டிகையைக் கொண்டாட முடிவு செய்துள்ளனர்‌.

மேற்படி பண்டிகைகள்‌ மற்றும்‌ தொடர்‌ விடுமுறையினை முன்னிட்டு, வெளியூர்களில்‌, குறிப்பாகச் சென்னை உள்ளிட்ட நகரங்களில்‌ பணிபுரிபவர்கள்‌ கிராமங்களை நோக்கிச் செல்வதற்காக அரசு மற்றும்‌ தனியார்‌ நிறுவனங்களுக்குச் சொந்தமான பேருந்துகளில்‌ முன்பதிவு செய்யும்‌ பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்‌. இதனை முன்னிட்டு, பயணிகள்‌ நெரிசலின்றிப் பயணிக்க ஏதுவாக, வெவ்வேறு பகுதிகளுக்கு தாம்பரம்‌ ரயில்‌ நிலையப்‌ பேருந்து நிலையம்‌, பூந்தமல்லி பேருந்து நிலையம்‌ மற்றும்‌ கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கூடுதலாக 3,000 பேருந்துகள்‌ இயக்க இருப்பதாகவும்‌, தேவைப்படின்‌ கூடுதல்‌ பேருந்துகளை இயக்கத் தயாராக இருப்பதாகவும்‌ தமிழ்நாடு அரசு சார்பில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, தனியார்‌ நிறுவனங்களும்‌ பேருந்துகளை வெவ்வேறு வழித்தடங்களில்‌ இயக்குகின்றன. இவ்வாறு தனியார்‌ நிறுவனங்களால்‌ இயக்கப்படும்‌ பேருந்துகளில்‌ இரண்டு மடங்கு கட்டணம்‌ வசூலிக்கப்படுவதாகவும்‌, குறிப்பாக குளிர்சாதன வசதியுடன்‌ கூடிய சென்னை- கோயம்புத்தூர்‌ வழித்தடத்திற்கான கட்டணம்‌ ரூ.2,800 வரை வசூலிக்கப்படுவதாகவும்‌, கிட்டத்தட்ட 1,500 பேருந்துகள்‌ தனியார்‌ நிறுவனங்களால்‌ இயக்கப்படுவதாகவும்‌, சென்னை- கோயம்புத்தூர்‌ விமானக்‌ கட்டணம்‌ ரூ.3,100 என்றிருக்கின்ற நிலையில்‌, பேருந்துக்‌ கட்டணம்‌ 2,800 ரூபாய்‌ வரை வசூலிக்கப்படுகிறது என்றும்‌, விமானக்‌ கட்டணத்திற்கும்‌ தனியார்‌ பேருந்துக்‌ கட்டணத்திற்கும்‌ உள்ள வித்தியாசம்‌ வெறும்‌ 300 ரூபாய்‌ என்றும்‌, அரசுத்‌ தரப்பில்‌ எச்சரிக்கை விடப்பட்டும்‌ எவ்வித மாற்றமும்‌ ஏற்படவில்லை என்றும்‌, விதி மீறல்கள்‌ தொடர்ந்து நடப்பதாகவும்‌, அரசு அதிகாரிகளுக்குத் தெரிந்தே இது நடப்பதாகவும்‌ பொதுமக்கள்‌ தெரிவிப்பதாக இன்று பத்திரிகைகளில்‌ செய்திகள்‌ வருகின்றன.

பண்டிகைக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பே இந்த நிலை என்றால்‌, பண்டிகைக்கு முன்‌தினம்‌ நிலைமை எப்படி இருக்கும்‌ என்பதை ஊகித்துப்‌ பார்க்கவே முடியாது என்று பொதுமக்கள்‌ நினைக்கிறார்கள்‌. போக்குவரத்து நெரிசலுக்கிடையில்‌ பத்து மணி நேரம்‌, பன்னிரெண்டு மணி நேரம்‌ பயணித்துச் செல்லக்கூடிய பேருந்துகளில்‌ விமானப்‌ பயணத்திற்கு இணையான கட்டணம்‌ வசூலிப்பது என்பதும்‌, சம்பிரதாயத்திற்காக எச்சரிக்கை விடுத்துவிட்டு, இதனை அரசு கண்டும்‌, காணாமல்‌ இருப்பது என்பதும்‌ கண்டிக்கத்தக்கது.

இதில்‌ ஆளும்‌ கட்சியினருக்கும்‌, தனியார்‌ பேருந்து உரிமையாளர்களுக்கும்‌ ரகசியத்‌ தொடர்பு இருக்கிறதோ என்று பொதுமக்கள்‌ எண்ணக்கூடிய அளவிற்கு கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு முதல்வர் இதில்‌ தனிக்‌ கவனம்‌ செலுத்தி, தனியார்‌ பேருந்துகளில்‌ வசூலிக்கப்படும்‌ அபரிமிதமான கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்துவதோடு, நியாயமான கட்டணம்‌ வசூலிக்கப்படுதற்கு வழிவகை செய்ய காவல்‌ துறை மற்றும்‌ போக்குவரத்துத்‌துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறேன்'” என்றார். 


மக்கள் கருத்து

JacobNov 8, 2021 - 12:09:52 PM | Posted IP 162.1*****

Ne aatchila irukkumbothu ithavida athikama than irunthathu. Apo un kannuku theriyala ipo theriyutho. Kalavani team.

adaminOct 12, 2021 - 03:49:58 PM | Posted IP 173.2*****

appo flight la munthuna naal book panna athigama kekraane... atha enna solrathu..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory