» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுகவின் வெற்றிப் பயணத்தை தடுக்க முடியாது : வேலூர் வெற்றி குறித்து ஸ்டாலின் பெருமிதம்

வெள்ளி 9, ஆகஸ்ட் 2019 5:40:20 PM (IST)

வேலூர் கோட்டையைக் வெற்றிக் கோட்டையாக்கிய வாக்காளர்களுக்கு நன்றி திமுகவின் வெற்றிப் பயணத்தை தடுக்க முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கடந்த 5-ஆம் தேதியன்று நடைபெற்ற வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளியன்று காலை 8 மணிக்கு துவங்கியது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்று வந்தார். ஆனால் திடீர் திருப்பமாக இறுதிநேரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த முன்னிலை பெற்றார். இறுதியில் 8141 வாக்குகள் வித்தியாசத்தால் கதிர் ஆனந்த்  வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் தாமதப்படுத்த முயற்சிக்கலாம்; தடுக்க முடியாது என்று வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தாமதப்படுத்த முயற்சிக்கலாம்; தடுக்க முடியாது என்பதுபோல, தி.மு.கழகத்தின் வெற்றிப் பயணத்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல். தி.மு.கழகத்திற்கு  வெற்றி மாலை சூடியிருக்கிறார்கள் வேலூர் வாக்காளர்கள். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தனியாக நடைபெற்ற தேர்தல் என்பதால் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ரத கஜ துரக பதாதிகள் அனைத்தும் வேலூரை வளைத்து முற்றுகையிட்டு, அதிகார அத்துமீறல்களுடன் ஆட்டம் போட்டனர். எதிர்க்கட்சியான தி.மு.கழகம் தனது தொண்டர் பட்டாளத்தையும், தோழமைக் கட்சிகளின்  பலத்தையும், பொதுமக்களின் பேராதரவையும் நம்பிக் களமிறங்கியது.

மக்களவைத் தேர்தலில் தி.மு.க., மிட்டாய் கொடுத்து குழந்தையை ஏமாற்றுவதுபோல வாக்காளர்களை ஏமாற்றிவிட்டது என தமிழக மக்களைக் கொச்சைப்படுத்தி, இழிவு செய்த முதலமைச்சர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினரின் விஷமப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையிலும், மத்திய-மாநில ஆட்சியாளர்களின் எதிர்மறைச் செயல்பாடுகளினால் மக்கள் சந்திக்கும் அவலங்களை எடுத்துரைக்கும் வகையிலும், கழகத் தலைவர் என்ற முறையில் நானும் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் களப்பணியாற்றினோம். அயராத உழைப்பும், சரியான வியூகமும் கொண்டு செயல்பட்ட உடன்பிறப்புகளின் தொண்டும், வேலூர் வாக்காளர்கள் தந்த ஆதரவும், ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் பணபலத்தையும் மீறி வேலூர் கோட்டையைக் கழகத்தின் வெற்றிக் கோட்டையாக்கியிருக்கிறது.

இந்தியா எதிர்பார்த்த இந்தத் தொகுதியின் முடிவு, தி.மு.கழகத்திற்குச் சாதகமாகியிருப்பதன் மூலம், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற தகுதியை நிலைநிறுத்தி, அதற்கான எண்ணிக்கையைப் பெருக்கியிருக்கிறது. இந்த மாபெரும் வெற்றியை, காலமெல்லாம் நம்மை வளர்த்தெடுத்து வழிகாட்டிய நம் நெஞ்சில் வாழும் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் காணிக்கையாக்கி, ஜனநாயக வழிமுறைகளில்,  திராவிட இயக்க இலட்சியங்களை வென்றெடுக்கும்  மகத்தான பணியில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்! இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

sankarAug 10, 2019 - 11:08:17 AM | Posted IP 162.1*****

இதுவே திமுக பெரும் கடைசி வெற்றியாக இருக்கலாம்

இவன்Aug 10, 2019 - 08:40:32 AM | Posted IP 108.1*****

உங்களுக்கு ஓட்டு போட்டவங்க எல்லாம் குடிகார முட்டா பயலுக

சாமிAug 9, 2019 - 05:44:05 PM | Posted IP 162.1*****

பெரும் பணம் செலவில் பெறப்பட்ட வெற்றி என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை - இது தொடருவது நல்லதா என்பதை மக்கள் தீர்மானித்து கொள்ளுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory