» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கர்நாடக மாநில இடைத் தேர்தலில் காங். கூட்டணி அமோக வெற்றி: ஒரு தொகுதியில் பா.ஜனதா வெற்றி

புதன் 7, நவம்பர் 2018 10:23:47 AM (IST)

கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், 4 இடங்களில் காங். கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஒரு தொகுதியை மட்டும் பா.ஜனதா தக்கவைத்தது.

கர்நாடகத்தில் எம்.பி.க்களாக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் எடியூரப்பா (சிவமொக்கா), ஸ்ரீராமுலு(பெல்லாரி), புட்டராஜூ(மண்டியா) ஆகியோர் கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் தங்களின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கர்நாடகம் சார்பில் நாடாளுமன்றத்தில் சிவமொக்கா, பெல்லாரி, மண்டியா ஆகிய 3 தொகுதிகள் காலியாக இருந்தன.

அதுபோல் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் குமாரசாமி ராமநகர், சென்னப்பட்டணா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். மேலும் ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வான சித்து நியாமகவுடா, சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் கர்நாடக சட்டசபையில் ராமநகர் மற்றும் ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாகின.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள மண்டியா, பெல்லாரி, சிவமொக்கா ஆகிய 3 தொகுதிகளுக்கும், சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும் கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. அதில், 2 நாடாளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஒரு நாடாளுமன்ற தொகுதியை மட்டும் பா.ஜனதா தக்க வைத்தது. இதன் மூலம் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்து உள்ளது.

மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் சிவராமகவுடா, 3 லட்சத்து 24 ஆயிரத்து 943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  பெல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 2 லட்சத்து 43 ஆயிரத்து 161 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்த தொகுதியாகும்.  சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் பா.ஜனதா வேட்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சர் எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய்.ராகவேந்திரா, 47 ஆயிரத்து 388 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

ராமநகர் சட்டமன்ற தொகுதியில், ஜனதா தளம்( எஸ்) வேட்பாளரும், முதல்-அமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா 1 லட்சத்து 9 ஆயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.ஜமகண்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.நியமகவுடா 39 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இடைத்தேர்தல் வெற்றியை காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்( எஸ்) தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையிலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற நிலையிலும் கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சியினருக்கு சாதகமான சூழலை உருவாக்கி உள்ளது. காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் இந்த வெற்றியைப் பதிவு செய்யும் என கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

crescentopticals


New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory