» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

சமூக நீதியை காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவள விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதன் 6, செப்டம்பர் 2017 12:09:38 PM (IST)

சமூக நீதியை காக்க வேறுபாடுகள், மாறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வரவேற்றார். தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசியத்தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் கடந்த 11-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. மழை காரணமாக இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த மழை வராமல் போயிருந்தால் இன்றைக்கு இங்கே அண்ணன் வைகோ வந்திருக்கமாட்டார். வேறு சில தலைவர்களும் வந்திருக்கமாட்டார்கள்.

தொண்டர்கள் பொறுமையாகவும், எழுச்சியாகவும் இருப்பதை பார்க்கும்போது நாட்டிலே ஆட்சி மாற்றம் வருகிறதோ இல்லையோ, மீட்சி வரும். இன்றைக்கு மாணவி அனிதாவை பறிகொடுத்து இருக்கிறோம். கையாலாகாத அ.தி.மு.க அரசு, மத்திய அரசுடன் கைகோர்த்து ஜனநாயக விரோதமாக செயல்பட்டு வருகிறது. சமூக நீதியை காக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கருணாநிதி பிறந்தநாள் கூட்டத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்றனர். சில தமிழக தலைவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்தக்குறை இன்றைக்கு தீர்க்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன்.

சமூக நீதியை காக்க வேறுபாடுகள், மாறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் பிளவை பயன்படுத்தி, காலூன்ற பா.ஜ.க. திட்டமிடுகிறது. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் எட்டா கனிக்கு கொட்டாவி விடுவதுபோல.. என்ற பழமொழியை தான். மோடி ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம்... இதை செய்வோம்... என்று கதைவிட்டார். மத்திய மோடி ஆட்சி வெறும் மோசடி ஆட்சியாக நடைபெறுகிறது. எனவே மோடி ஆட்சியை அகற்றுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

முன்னதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:1974-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தி.மு.க. தலைவர் கருணாநிதி சங்கரன்கோவில் வழியாக ரெயிலில் வந்தார். அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நான் காத்திருந்தேன். ரெயில் வந்ததும் கருணாநிதி வாசலுக்கு வந்தார். நான் அவருக்கு சால்வை அணிவித்தேன்.

என்னை பார்த்த கருணாநிதி உடனடியாக நீ வண்டியில் ஏறு என்றார். உடனே அவரது உதவியாளர் சண்முகநாதன் என் கையை பிடித்து வண்டியில் ஏற்றிவிட்டார். ரெயில் கிளம்பியதும் கருணாநிதி என்னிடம் ஏன் மெலிந்துவிட்டாய்? என்று கேட்டார். நான் அதற்கு, வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் இருந்தேன். நீங்கள் வருவதை கேள்விப்பட்டதும் உடனே வந்துவிட்டேன் என்றேன்.

அதன்பின்னர் குற்றாலம் சுற்றுலா மாளிகைக்கு கருணாநிதி ஓய்வெடுக்க சென்றுவிட்டார். நானும் அங்கே தான் இருந்தேன். கருணாநிதியின் டாக்டர் என்னிடம், தலைவருக்கு (கருணாநிதி) நீங்கள் உயிரானவரா? என்று கேட்டார். நான், எதற்கு கேட்கிறீர்கள்? என்றேன். விருதுநகரில் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் நார்மலாக இருந்தது. ஆனால் குற்றாலத்தில் அவரை பரிசோதித்தபோது ரத்த அழுத்தம் அதிகமாகி இருந்தது. உங்களுக்கு என்ன அதிர்ச்சி? என்று கருணாநிதியிடம் கேட்டதற்கு, கோபால்சாமி (வைகோ) கட்டுமஸ்தான இளம் காளை போன்று இருப்பான். இப்போது மெலிந்துவிட்டான் என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டு நான் நெகிழ்ந்து போய்விட்டேன். கருணாநிதியுடனான எனது நினைவுகள் என் நெஞ்சில் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறது. கருணாநிதி நலமுடன் வாழவேண்டும். மீண்டும் அவர் உரையாற்றுவதை தமிழ் சமுதாயம் காணவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கனிமொழி எம்.பி.

கூட்டத்தில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், இளைஞரணி துணை செயலாளர் வக்கீல் எஸ்.ஜோயல், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் உருவப்படம் ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டு முரசொலி பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டு இருந்தது. பொதுக்கூட்டம் தொடங்கும் முன்னர் அனிதாவின் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் மரியாதை செலுத்தினர். பொதுக்கூட்டம் முடிவடையும் வரை அனிதாவின் உருவப்படம் மேடையிலேயே இருந்தது.


மக்கள் கருத்து

தலSep 7, 2017 - 09:06:00 PM | Posted IP 160.2*****

கொலைப்பழி சுமத்திய கொலைகார கூட்டத்தோட நீ மறுபடியும் சேருகிறாயே- உனக்கு வெட்கம் மானம் ஏதாவது இருக்கிறதா

தம்பிSep 7, 2017 - 01:40:06 PM | Posted IP 103.2*****

அப்போ இருந்து இப்போ வரை - இழவு வீட்டுல தானேடா கட்சி நடத்துறீங்க

சாமிSep 7, 2017 - 12:57:10 PM | Posted IP 103.2*****

சரி - சோலி முடிஞ்சிருச்சு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

CSC Computer Education

Sterlite Industries (I) LtdNalam Pasumaiyagam


Universal Tiles Bazar


Johnson's Engineers

selvam aqua

New Shape TailorsThoothukudi Business Directory