» சினிமா » செய்திகள்
நான் இறக்கவில்லை.... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அப்துல் ஹமீது!
செவ்வாய் 25, ஜூன் 2024 4:50:20 PM (IST)
நான் இறக்கவில்லை.... எந்த ஒரு செய்தியையும் தீர விசாரித்து நிச்சயப்படுத்திய பிறகே பதிவிடும் ஊடகப் பண்புதான் இறந்துவிட்டது என்று தொகுப்பாளர் அப்துல் ஹமீது தனது உடல்நிலை பற்றி வெளிவந்த வதந்திகளுக்கு வீடியோ வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இலங்கை வானொலியில் பணியாற்றி வந்தவர் அப்துல் ஹமீது. இவரின் காந்தக் குரலும், தெளிவான தமிழ் பேச்சும் அவரை மிகவும் பிரபலமாக்கியது. வானொலியில் பிரபலமானதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான 'லலிதாவின் பாட்டுக்கு பாட்டு' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அப்துல் ஹமீது. பல வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் அப்துல் ஹமீது. இவரின் குரலுக்கு பலரும் அடிமை என்றே சொல்லலாம்.
இப்படி புகழ்பெற்ற தொகுப்பாளராக வலம் வந்த அப்துல் ஹமீது, இலங்கையில் வசித்து வந்தார். இதனிடையே அவர் உடல்நல குறைவால், காலமானதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி ஒன்று பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர் நலமுடன் இருப்பதாகவும் அந்த தகவல் வெறும் வதந்தி தான் என்றும் உறுதிப்படுத்தினர்.
இந்த நிலையில், தன்னைப்பற்றி பரவிய வதந்திக்கு பின் கண்ணீருடன் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அப்துல் ஹமீது. அந்த வீடியோவில், மாண்டவன் மீண்டும் வந்து பேசுகிறானே என சிலர் வியந்து நோக்கக்கூடும். நேற்று நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷம செய்தியை கேட்டு பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தார்கள்.
சிலர் என் குரலை கேட்டதும் கதறி அழுததை கேட்டு, என்னால் தாங்க முடியவில்லை. இத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்தாளோ என் அன்னை என்று நினைத்துக் கொண்டேன். நேற்று இலங்கை பத்திரிகையில், மரணம் மனிதனுக்கு கிடைத்த வரம் என்கிற கட்டுரையை நான் எழுதி இருந்தேன். அப்படி ஒரு அனுபவம் தான் எனக்கு கிடைத்திருக்கிறது.
செத்துப் பிழைப்பது எனக்கு மூன்றாவது அனுபவம். முதல் அனுபவம் 1983-ம் ஆண்டு, இனக்கலவரத்தின் போது என்னையும் என் மனைவியையும் உயிரோடு எரித்துவிட்டார்கள் என்கிற வதந்தி பரவியது. அதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் யூடியூப்பில் ஒருவர் என்னுடைய பெயரை போட்டு நான் இறந்துவிட்டதாக பதிவு செய்திருந்தார். அது இரண்டாவது முறை. தற்போது மூன்றாவது முறையும் என்னைப்பற்றிய மரண செய்தி வந்திருக்கிறது. 3 முறை உயிர் பிழைத்திருக்கிறேனா என்று நகைச்சுவையாக எண்ணத் தோன்றுகிறது என அப்துல் ஹமீது பேசி உள்ளார்.