» சினிமா » செய்திகள்

நடிகர் அஜித்குமாரின் வீட்டு முன் தீக்குளிக்க முயன்ற பெண் - பரபரப்பு தகவல்

செவ்வாய் 5, அக்டோபர் 2021 4:50:14 PM (IST)

ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீட்டு முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் அஜித்குமார், தனது மனைவி ஷாலினியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அந்த மருத்துவமனையில் பணியாற்றிய பெண் ஊழியர் பர்சானா (26) ஆர்வ மிகுதியால் தனது செல்போனில் அஜித்குமாரை வீடியோ எடுத்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுடன் புகைப்படம் எடுப்பதும், அதை வலைதளங்களில் பரப்புவதும் தவறு என பர்சானாவிடம் மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்து கூறினர். ஆனால் அஜித்குமார், மருத்துவமனைக்கு வந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, வதந்தி பரவியதால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் மருத்துவமனை நிர்வாகம், பர்சானாவை பணியிடை நீக்கம் செய்தது. இதை கேள்விப்பட்ட அஜித்குமாரின் மனைவி ஷாலினி, மருத்துவமனை நிர்வாகத்திடம் பரிந்துரை செய்ததால் பர்சானா மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதாகவும், ஆனால் சிறிது நாட்களிலேயே மீண்டும் பர்சானா பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கொரோனா ஊரடங்கின்போது போதிய வருமானம் இன்றி குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலையால் பரிதவித்த பர்சானா, அஜித்குமாரின் மேலாளரை சந்தித்து தனக்கு மீண்டும் மருத்துவமனையில் வேலை கிடைக்க அஜித்குமாரிடம் பேசி உதவுமாறு கேட்கும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று மாலை பர்சானா, சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீட்டு வாசலில் நின்று கொண்டு திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

உடனடியாக அங்கிருந்த நீலாங்கரை போலீசார் அவரை தடுத்தனர். பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். அப்போது பர்சானா, "எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அஜித்குமாரை சந்திக்காமல் இங்கிருந்து போக மாட்டேன். ஒரு வருடமாக என் வாழ்க்கையில் ஒரே போராட்டமாக உள்ளது” என்றார். இதையடுத்து போலீசார் அவரையும், அவருடன் வந்த மற்றொரு பெண்ணையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory