» சினிமா » திரை விமர்சனம்

Share

மதராஸபட்டணம் - நம்ம ஊரு டைட்டானிக்

புதன் 28, ஜூலை 2010 5:24:37 PM (IST)



'நாடு விடுதலை பெறும் தருணம்... ஆனால் ஒரு ஏழை சலவைத் தொழிலாளியின் காதல் மட்டும் அடிமைாயாகவே சாகிறது' என்ற ஒற்றை வரி கதைக்கு இயக்குநர் விஜய் தந்திருக்கும் பிரமாண்ட திரை வடிவம் மதராஸபட்டிணம்.

கிட்டத்தட்ட ஒரு லோக்கல் டைட்டானிக் (கதை, சில காட்சிகள் உள்பட அப்படியே உல்டா!) என்று வைத்துக் கொள்ளுங்களேன்! 1947-ல் கூவம் ஆற்றோடுபோன தன் காதலன் ஆர்யாவைத் தேடி, அவர் எப்போதோ தந்த தாலிக்கயிறுடன், 2010-ம் ஆண்டு சென்னைக்கு வருகிறார் வெள்ளைக்கார மூதாட்டியான எமி வில்கின்ஸன்.

சென்னை முழுக்கத் தேடுகிறார். தேடும்போது, சென்னையின் இப்போதைய கூவம் ஆற்றைப் பார்க்கிறார். நினைவுகள் 1947-க்கு பயணிக்கிறது. வெள்ளையர் நாட்டை விட்டு வெளியேறும் சூழலில் அன்றைய மதராஸ் கவர்னர் மகள் எமிக்கும், சலவைத் தொழிலாளி மகன் ஆர்யாவுக்கும் பெரும் போராட்டச் சூழலுக்கு நடுவே காதல் பூக்கிறது. ஆனால் எமியின் விருப்பத்துக்கு மாறாக வெள்ளைக்கார போலீஸ் அதிகாரிக்கு நிச்சயம் செய்கின்றனர் அவரது பெற்றோர்.

எமி-ஆர்யா காதல் கவர்னருக்குத் தெரிய வருகிறது. உடனே ஆர்யாவை அழிக்க சகல பலத்தையும் காட்டுகிறார்கள் கவர்னரும் போலீஸ் வில்லனும். ஆனால் அனைத்தையும் வழக்கம்போல முறியடிக்கிறார் ஆர்யா.

நாடு விடுதலையடையும் நாளன்று எமியை மதராஸிலிருந்து இங்கிலாந்துக்கு அனுப்ப திட்டமிடுகிறார்கள். அந்தச் சதியையும் முறியடிக்கிறார்கள். இறுதியில் இணைகிறார்கள். ஆனால் எதற்காக மீண்டும் பிரிகிறார்கள், மீண்டும் சந்தித்தார்களா? என்பது மீதிக் கதை.

வித்தியாசமான முயற்சிதான். ஆனால் காட்சிகளில் பல, அப்பட்டமாக டைட்டானிக்கின் மறுவடிவமாகவே தெரிகின்றன. 1947-ம் ஆண்டு சென்னை எப்படி இருந்திருக்கும் என்பதை அட்டகாசமாக உயிர்ப்பித்துக் காட்டியுள்ளார்கள். இயக்குநர் விஜய்க்கும் கலை இயக்குநர் செல்வகுமாருக்கும் பாராட்டுக்கள். ஆனால் அந்த சிரத்தையையும், தீவிரத்தையும் திரைக்கதை அமைப்பில் காட்டாமல் விட்டதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

பல காட்சிகள் மகா நீளம். க்ளைமாக்ஸ் காட்சியில் குமரவேலின் செயற்கைத் தனமும் மிகச் சுலபத்தில் யூகிக்கக் கூடிய கதைப் போக்கும் படத்தின் மீதிருந்த மரியாதையை சட்டென்று குறைத்துவிடுகின்றன.

நடிப்பில் ஆர்யாவுக்கு இது புதிய பரிமாணம். ஒரு சலவைத் தொழிலாளியின் மகன், அதே நேரம் விடுதலைக்கு ஏங்கும் இந்திய இளைஞன், அந்த விடுதலை வந்தால் காதலி ஊரை விட்டுப் போய்விடுவாளோ என மறுகும் காதலன்... என பன்முகம் காட்டியுள்ளார்.

புதுமுகம் எமி வில்கின்ஸன் கொள்ளை அழகு. நடிப்பும் நன்றாகவே வருகிறது. தேறிவிடுவார். நாசர், எம்எஸ் பாஸ்கர், பாலாசிங், விஎம்சி அனீபா, ஜாக் ஜேம்ஸ்... என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம். பிரகாஷ்குமார் இசையில் வாம்மா துரையம்மா... இனிமை. ஆனால் அதைப் பாடியிருக்கும் உதித் நாராயணன் வாயில் வசம்பை வைத்துத் தேய்க்க.. கொல்கிறார் மனிதர்.

இயக்குநர் விஜய்யின் இந்த முயற்சி வித்தியாசமானது என்றாலும், அதற்கு அவர் எடுத்துக் கொண்ட கதை ஏற்கெனவே பரிச்சயமானது என்பதால் சுவாரஸ்யமிழந்து போகிறது.

பழைய மெட்ராஸ் பார்க்கும் ஆர்வமுள்ளவர்களுக்காக இந்த பயாஸ்கோப்!


மேலும் தொடரும் செய்திகள்

இனிது இனிது

திங்கள் 6, செப்டம்பர் 2010 1:32:15 PM (IST)

காதல் சொல்ல வந்தேன்

திங்கள் 23, ஆகஸ்ட் 2010 11:49:33 AM (IST)

திசைமாறிய பாணா காத்தாடி!

திங்கள் 9, ஆகஸ்ட் 2010 7:43:27 PM (IST)

கிக்கான கலர்ஃபுல் தில்லாலங்கடி

வியாழன் 29, ஜூலை 2010 3:59:15 PM (IST)

மனதைத் திருடும் களவாணி

செவ்வாய் 27, ஜூலை 2010 10:41:07 PM (IST)

வெறும் கையுடன் வந்த 'விருந்தாளி'

வெள்ளி 23, ஜூலை 2010 7:41:58 PM (IST)


Sponsored Ads