» சினிமா » திரை விமர்சனம்

Share

மனதைத் திருடும் களவாணி

செவ்வாய் 27, ஜூலை 2010 10:41:07 PM (IST)



மெகா பட்ஜெட்டில் உருவாகி பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டு மண்ணைக் கவ்விய படங்களும் உண்டு,​​ சின்ன பட்ஜெட்டில் தயாராகி சத்தமே இல்லாமல் வந்து சக்கை போடு போட்டப் படங்களும் உண்டு.​ அதில் இரண்டாவது ரகம் களவாணி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கிராமம் அரசனூர்.​ அந்த கிராமத்தில் பல முறை ப்ளஸ் டூ தேர்வு எழுதியும் தேறாத இளைஞன் அறிக்கி.​ ​ பணத்தைக் கொடுத்து எப்படியாவது பாஸ் பண்ண நினைக்கிறான்.​ பெண்களை பார்த்து பல் இளிப்பது,​​ நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது,​​ ஊர் சுற்றுவது,​​ பக்கத்து ஊருக்குச் சென்று கூத்து பார்ப்பது என்று ஊதாரித்தனமாக இருப்பவன்.

ராணிமங்கலத்திலிருந்து அரசனூர் வழியாக படிக்கச் செல்லும் மகேஸ்வரியிடம் விளையாட்டாக பேசிப் பழக ஆரம்பிக்கிறான் அறிக்கி.​ அவள் மீது உள்ள ஏக்கம் காதலாக மாறி அவளையும் காதலிக்க வைக்கிறான்.​ அறிக்கியின் சில நல்ல செயல்கள் அவளுக்குப் பிடித்து போனதால் அவளும்,​​ காதல் குளத்தில் இறங்கி நீச்சலடிக்கிறாள்.

நண்பனின் காதலை சேர்த்து வைப்பதாக குடிபோதையில் ஒரு பெண்ணை கடத்தி அவமானப்படுகிறான் அறிக்கி.​ அதனால் அவன் மீது "பொம்பளை பொறுக்கி' என்ற முத்திரை விழுகிறது.​ மகேஸ்வரியை பார்க்க கோவில் திருவிழாவுக்குச் சென்றபோது அங்கு ஆட வந்த ஆட்டக்காரியை கடத்த வந்ததாக அறிக்கியை அடித்து விரட்டுகின்றனர்.​ இதனால் மனம் உடைந்து அறிக்கி மீது கோபமாகிறாள் மகேஸ்வரி.​ துபாயில் இருந்து திரும்பிய அறிக்கியின் தந்தை இளவரசு,​​ கிரகநிலை சரி இல்லாததால் மகன் இப்படி இருப்பதாக நினைக்கும் மனைவி சரண்யாவையும்,​​ தாயின் அறியாமையால் ​ கெட்டு போய் கிடக்கும் ஊதாரி மகனைப் பார்த்து நொந்து போகும் இளவரசு,​​ பாதி கட்டிய வீட்டை முழுவதுமாக முடித்து கிரஹபிரவேசம் நடத்த ஏற்பாடு செய்கிறார்.

காதலி அருகில் இல்லாதபோது காதலின் ஆழத்தையும்,​​ வலியையும் உணரும் அறிக்கி,​​ அவளுக்கு நடக்க இருக்கும் திடீர் திருமணத்தை நிறுத்தி தனது பெற்றோரின் ஒப்புதலோடு மகேஸ்வரியை எப்படி கை பிடிக்கிறார் என்பது மீதி படம்.

ஒரே பாட்டும்,​​ கூத்தும்,​​ நக்கலும்,​​ நையாண்டியும்,​​ எகத்தாளமுமாக படம் ஜாலியாகப் போகிறது.​ முதல் பாதியில் ஜாலின்னா,​​ இரண்டாம் பாதி செம விறுவிறுப்பு.​ படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் கதை புள்ளட் வேகத்தில் சென்றிருக்கும்.​ இப்படத்தை இயக்கியிருக்கும் சற்குணத்துக்கு இது முதல் படமாம்.​ ஆனால் பல படங்களை இயக்கி அனுபவம் பெற்ற ஆற்றல் அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது.​ சபாஷ் சற்குணம்!

"பசங்க' படத்தில் மீனாட்சி சுந்தரமாக வந்த விமல் இப்படத்தில் அறிக்கி என்ற அறிவழகனாக வாழ்ந்திருக்கிறார்.​ அவரது வேட்டி கட்டிய நடை,​​ பவுடர் மடித்த கைக்குட்டை,​​ வாத்தியாரிடமிருந்து சிகரெட்,​​ உர மூட்டை திருடுவது,​​ பாரில் குடிகாரனிடம் பணத்தை அபேஸ் செய்வது என காட்சிக்கு காட்சி கதையின் நாயகனாக பரிமளித்திருக்கிறார்.

மகேஸ்வரியாக வரும் கேரளத்து வரவு ஓவியா,​​ பள்ளிக்கூட சீருடையுடன் வரும்போதாகட்டும்,​​ பாவாடை தாவணியில் வரும்போதாகட்டும் அழகு ஓவியம் தான்!​ ​ பயந்து பயந்து பேசுவது,​​ சிரித்தவாறே காதலை பாதி மறைத்தும்,​​ பாதியை சொல்லியும அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள்,​​ அவர் திறமையானவர் என்பதை பறைசாற்றுகிறது.​ ​

பிள்ளையை விட்டுக் கொடுக்காத பாசக்கார அம்மாவாக சரண்யா அசத்தியிருக்கிறார்.​ அவரது கணவராக இளவரசுவும் கலக்கியிருக்கிறார்.​ அவருடைய கோபம் "புஸ்' என ஆகும்போது தியேட்டரில் சிரிப்புதான்.​ கஞ்சா கருப்பின் அந்த விஷம் குடித்த காமெடி காட்சி வயிறை பதம் பார்க்கிறது.​ இளங்கோ என்ற வில்லன் பாத்திரம்,​​ விமலின் தங்கச்சி பாத்திரம் யதார்த்தத்தின் வெளிப்பாடு.

​ எஸ்.எஸ்.குமரனின் இசையில்,​​ "டம்ம...​ டம்ம...',​ "பேஞ்ச மழை...' ஆகிய பாடல்கள் ரசிக்க முடிகிறது.​ தஞ்சையின் நஞ்சை,​​ புஞ்சை பசுமையை கண்களை குளிர வைக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்.மொத்தத்தில், மனதைத் திருடும் "களவாணி"



மேலும் தொடரும் செய்திகள்

இனிது இனிது

திங்கள் 6, செப்டம்பர் 2010 1:32:15 PM (IST)

காதல் சொல்ல வந்தேன்

திங்கள் 23, ஆகஸ்ட் 2010 11:49:33 AM (IST)

திசைமாறிய பாணா காத்தாடி!

திங்கள் 9, ஆகஸ்ட் 2010 7:43:27 PM (IST)

கிக்கான கலர்ஃபுல் தில்லாலங்கடி

வியாழன் 29, ஜூலை 2010 3:59:15 PM (IST)

வெறும் கையுடன் வந்த 'விருந்தாளி'

வெள்ளி 23, ஜூலை 2010 7:41:58 PM (IST)


Sponsored Ads