» சினிமா » திரை விமர்சனம்

Share

லட்சியவாதி கருணாஸ்:அம்பாசமுத்திரம் அம்பானி!

திங்கள் 12, ஜூலை 2010 2:27:29 PM (IST)



அம்பாசமுத்திரத்தை சேர்ந்த கருணாஸ் அனாதையாக சென்னை வருகிறார். பேப்பர் போடும் பையனாக வாழ்வை துவக்கி பூ விற்பது, ஐஸ் வியாபாரம் என்றெல்லாம் கடினமாக உழைக்கிறார். அம்பானி போல் கோடீஸ்வரர் ஆவது அவர் லட்சியம்.
 
கோட்டா சீனிவாசராவ் கட்டும் அடுக்கு மாடி வணிகவளாகத்தில் ஒரு கடை வாங்க ஆசைப்பட்டு தன் சம்பாத்தியத்தில் இருந்து சிறுக சிறுக முப்பத்தைந்து லட்சம் ரூபாய் வரை கொடுக்கிறார். கோட்டா மீதுள்ள நம்பிக்கையில் ரசீது வாங்க மறுக்கிறார். பத்து லட்சம் கொடுத்தால் கடை சொந்தமாகிவிடும் என்ற நிலையில் கோட்டா மண்டையை போடுகிறார்.
 
கோட்டா மகனிடம் மீதி பணத்தை கொடுத்து கடையை கேட்கும் போது அடியாட்களால் அடித்து விரட்டப்படுகிறார். எல்லா பணத்தையும் இழந்து நிர்க்கதியாகி புலம்புகிறார். லட்சியம் நிறைவேறியதா இல்லையா என்பது கிளைமாக்ஸ்...
 
காமெடி தரித்த தன்னால் குணசித்திர ஹீரோவாகவும் ஒளிர முடியும் என நிரூபித்துள்ளார் கருணாஸ்...
 
கோடீஸ்வர கனவுகளை விழிகளில் தேக்கி ராப்பகல் உழைத்து உயர துடிக்கும் சராசரி இளைஞனாக வாழ்ந்துள்ளார்.
 
அதிகாலை ஒற்றைக்காலில் நின்று நான் அம்பானியாகனும் என்று மந்திரம் சொல்ல மறுநாள் அதையே எல்லா வீட்டுக்காரர்களும் சொல்லி தங்கள் ஆசைகளை வெளிப்படுத்துவது ரகளை.
 
பக்கத்து வீட்டு நவ்னீத் கவுர் தன்னை காதலிக்கையில் லட்சியங்கள் தவிடு பொடியாவது மாதிரி உணர்வதும் அவரை மறக்க வீட்டை காலி செய்து வெளியேறுவதும் அழுத்தமான பதிவுகள்.
 
நவ்னீத் கவுர் பெற்றோர் கொள்ளையர்களால் சாகடிக்கப்படுவதும் அதே வீட்டுக்கு கருணாஸ் பூ கொண்டு வந்து கலங்குவதும் உருக்கம்.
 
கடை வாங்க கொண்டு போகும் பணத்தை கூடவே இருக்கும் மாஸ்டர் சங்கர் பறித்துக் கொண்டு ஓடுவதும் போலீசில் அவர் சிக்கியதும் டிரெஸ், சாப்பாடு என எல்லாவற்றையும் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி வாங்கினேன். பணத்தை மட்டும் நான் சேர்த்துக்கிட்டேன். உனக்கு பணம் தேவைப்படும்னு தோணாமல் போச்சு என்று வேதனை காட்டும் போது விழிக்குள் நீர் முட்ட வைக்கிறார்.
 
ரெயில் நிலைய தரையில் விழுந்து என் பணமெல்லாம் போச்சே என்று கதறி துடிக்கையில் இதயத்தை பிழிகிறார். இலவச சேலை வாங்க போய் கூட்டத்தில் மிதி பட்டு சாகும் கருணாஸ் தாயின் பிளாஸ்பேக் கதை நெஞ்சை முட்டுகிறது.
 
லட்சியவாதி கருணாசை நவ்னீத் கவுர் விரட்டி விரட்டி காதலிப்பது கலகலப்பபு... பெற்றோரை இழந்ததும் கருணாஸ் எதிர்ப்பை மீறி அவர் வீட்டில் பெட்டி படுக்கையுடன் வந்து தங்குவது நேர்த்தி.
 
கோட்டா சீனிவாசராவ் யோக்கியமான வில்லத்தனத்தில் ஓட்டுகிறார். அவரது மகனாக வரும் சேரன் ராஜ் வலுவான வரவு. இவருக்கு வில்லன் பாத்திரங்கள் வரிசை கட்டலாம். நவ்னீத்தை ஒருதலையாக காதலிக்கும் லிவிங்ஸ்டன், வி.எம்.சி. ஹனிபா, டி.பி.கஜேந்திரன் பாத்திரங்களும் வலுவாக செதுக்கப்பட்டு உள்ளன. மயில்சாமி, சிங்கமுத்து சிரிக்க வைக்கிறார்கள்.
 
குடும்ப பாங்கான கதையை நெகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் நகர்த்தி காட்சிகளோடு கட்டி போடுகிறார் இயக்குனர் ராம்நாத். கிளைமாக்ஸ் கைதட்ட வைக்கிறது.
 
கருணாஸ் வீட்டில் நவ்னீத் முடங்கியதும் அவர்களுக்குள் நடக்கும் காதல் கல்யாண முதலிரவு சமாச்சாரங்கள் கதையோட்டத்தில் இருந்து நழுவி வேகத்தடை போடுகின்றன.

கருணாஸ் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. புலித் தேவன் ஒளிப்பதிவு கைகொடுக்கிறது.


மேலும் தொடரும் செய்திகள்

காதல் சொல்ல வந்தேன்

திங்கள் 23, ஆகஸ்ட் 2010 11:49:33 AM (IST)

திசைமாறிய பாணா காத்தாடி!

திங்கள் 9, ஆகஸ்ட் 2010 7:43:27 PM (IST)

கிக்கான கலர்ஃபுல் தில்லாலங்கடி

வியாழன் 29, ஜூலை 2010 3:59:15 PM (IST)

மனதைத் திருடும் களவாணி

செவ்வாய் 27, ஜூலை 2010 10:41:07 PM (IST)

வெறும் கையுடன் வந்த 'விருந்தாளி'

வெள்ளி 23, ஜூலை 2010 7:41:58 PM (IST)


Sponsored Ads