» சினிமா » திரை விமர்சனம்

ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரை விமர்சனம்!

வெள்ளி 11, அக்டோபர் 2024 11:16:43 AM (IST)

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ரஜினிகாந்த், கன்னியாகுமரியில் போலீஸ் எஸ்பியாக இருந்து ரவுடிகளை வேட்டையாடி வருகிறார். ஒரு அரசு பள்ளியில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதை ஆசிரியை துஷாரா விஜயன் கண்டுபிடித்து ரஜினிக்கு தகவல் தருகிறார்.

அந்த சம்பவத்துக்கு பிறகு துஷாராவுக்கு நற்பெயர் கிடைத்து சென்னைக்கு பணி மாற்றம் பெறுகிறார். அங்கு தனியார் நிறுவனம் ஆன் லைன் கல்வி என்ற பெயரில் ஏழைகளை கடன் வாங்க செய்து வஞ்சிப்பதற்கு எதிராக குரல் கொடுக்கிறார். இந்த நிலையில் மர்மமான முறையில் துஷாரா கொலை செய்யப்படுகிறார். குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை வழக்கை ரஜினியிடம் ஒப்படைக்கிறது.

ரஜினிகாந்த் சென்னைக்கு வந்து குற்றவாளி என்று கருதப்படும் இளைஞனை தேடிப்பிடித்து என்கவுண்ட்டர் செய்கிறார். மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் ஓய்வுப்பெற்ற நீதிபதி அமிதாப்பச்சன் இளைஞனை போலி என்கவுண்ட்டர் செய்து விட்டதாக ஆதாரத்தோடு நிரூபிக்க அதிர்ச்சி திருப்பம்.

குற்ற உணர்ச்சியில் தவிக்கும் ரஜினி உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தன்னால் தவறாக என்கவுண்ட்டர் செய்யப்பட்ட அப்பாவி இளைஞனுக்கும், துஷாராவுக்கும் நீதி வாங்கி தர முயற்சிக்கிறார். துஷாராவை கொலை செய்தது யார்? ரஜினியால் உண்மையான குற்றவாளியை நெருங்க முடிந்ததா? என்பது மீதி கதை.

துப்பாக்கியும் கையுமாக ரஜினியை அறிமுகப்படுத்தி கதை மிக அழகாக அடுத்து கட்டத்துக்கு நகரும்போது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகிறது. ரஜினியும் நடனம், சண்டை, எமோஷன் என ஒவ்வொரு காட்சியிலும் துடிப்போடும் இளமையோடும் என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருகிறார்

சமூக விரோதிகளுக்கு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட், வீட்டில் அன்பான குடும்ப தலைவர், வேலையில் கண்டிப்பான அதிகாரி, தவறுக்கு பரிகாரம் தேட நினைக்கும் மனிதாபிமானமுள்ளவர் என ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமாக நடித்துள்ளார்.

‘குறி வெச்சா இரை விழணும்' என்று பஞ்ச் பேசும்போது மொத்த திரையரங்கமும் பரவசத்தில் ஆர்ப்பரிக்கிறது. சண்டை காட்சிகளில் அதே வேகம், ஸ்டைல் மலைக்க வைக்கிறது. மனசுக்குள்ளேயே அழுது வெம்பும் காட்சிகள் கிளாஸ் ரகம்.

அமைதியாக வந்து அழுத்தமாக பேசி தன்னுடைய கதாபாத்திரத்துக்கு கம்பீரம் சேர்த்துள்ளார் அமிதாப்பச்சன். ரஜினியின் ஜோடியாக வரும் மஞ்சு வாரியருக்கு ஜாலியான வேடம். அவரும் ஆட்டமும் பாட்டமுமாக ரசித்து செய்துள்ளார். கார்பரேட் ஸ்டைலிஷ் வில்லனாக வரும் ராணாவின் நடிப்பு நினைவில் நிற்குமளவுக்கு சிறப்பு.

பகத் பாசில் வழக்கம் போல் தன்னுடைய கதாபாத்திரத்தை அசாத்தியமான நடிப்பால் ஊதி தள்ளுகிறார். துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி, கிஷோர், ராவ் ரமேஷ், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், ரக் ஷன் என அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் ஜமாய்த்திருக்கிறார்கள்.

ராணா தொடர்பான கதையில் அடர்த்தி இல்லாதது, ஆந்திரா எபிசோட் காட்சிகள் பலவீனம். அனிருத் இசையில் ‘மனசில்லாயோ' பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை கதையோடு பயணித்து படத்தை தாங்கி பிடிக்கிறது.எஸ்.ஆர்.கதிரின் கேமரா ரஜினியின் ஒவ்வொரு ஸ்டைல் மூவ்களையும் கதையின் வீரியத்தையும் நேர்த்தியாக படம் பிடித்துள்ளது.

போலி என்கவுண்ட்டரையும் ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் மாணவர்களையும் அப்பாவி மக்களையும் எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதையும் தோலுரித்துக் காட்டியிருப்பதோடு, ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஸ்டைல், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் என எதையும் விட்டுவைக்காமல் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் த.செ.ஞானவேல்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory