» செய்திகள் » விளையாட்டு

Share

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: 15 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் வெற்றி!

ஞாயிறு 25, ஜூலை 2010 11:32:46 AM (IST)

 
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்கிறது.
 
பாதுகாப்பு பிரச்சினை காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து அங்கு நடக்க இருந்த பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் பொதுவான இடமான இங்கிலாந்தில் நடத்தப்பட்டது. இதில் முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
 
இந்நிலையில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 21ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 88 ரன்களில் சுருண்டு, கடந்த 26 ஆண்டுகளில் மோசமான ரன்னை பெற்றது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 258 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 170 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங், மைக்கேல் கிளார்க், ஸ்டீவன் சுமித் ஆகியோரின் அரைசதம் உதவியுடன் 349 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.
 
இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கொண்டு 40 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

சிறிய இலக்கு தான் என்றாலும், பாகிஸ்தான் வீரர்களால் அதனை எளிதில் எட்ட முடியவில்லை. வெற்றிக்கனியை பறிக்க மேலும் 4 விக்கெட்டுகளை பறிகொடுக்க வேண்டி இருந்தது. முடிவில் 50.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் திரில் வெற்றியை பெற்றது. இம்ரான் பர்கத் 67 ரன்களும், அசார் அலி 51 ரன்களும், கம்ரன் அக்மல் 13 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் போலிஞ்சர், ல்பனாஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 13 டெஸ்ட் தோல்விகளுக்கு பிறகு பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றியாகும். அதாவது 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வெற்றியை ருசித்திருக்கிறது. இதற்கு முன்பு கடைசியாக 1995ம் ஆண்டு வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிட்னியில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் 2 டெஸ்ட் கொண்ட தொடரை பாகிஸ்தான் 1&1 என்ற கணக்கில் சமன் செய்தது. அப்ரிடி திடீரென முதல் போட்டியுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் சல்மான் பட் தலைமையில் பாகிஸ்தான் களம் இறங்கியது. அவரது தலைமையில் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அசத்தி இருக்கிறது. அடுத்து இங்கிலாந்துடன் 4 டெஸ்டில் பாகிஸ்தான் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் வருகிற 29ந்தேதி தொடங்குகிறது.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads