» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் அபார சதம் : 385 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி!

செவ்வாய் 24, ஜனவரி 2023 8:57:05 PM (IST)



நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது ஒருநாள் ஆட்டம், இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து அணியில் சிப்லிக்குப் பதிலாக ஜகோப் டஃபி தேர்வாகியுள்ளார். இந்திய அணியில் இரு மாற்றங்கள். ஷமி, சிராஜுக்குப் பதிலாக உம்ரான் மாலிக், சஹால் விளையாடுகிறார்கள். 

ஆரம்பம் முதல் வேகமாக ரன்கள் எடுத்தார்கள் ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும். 10 ஓவர்களின் முடிவில் 82 ரன்கள் கிடைத்தன. ஷுப்மன் கில் 32 பந்துகளிலும் ரோஹித் சர்மா 41 பந்துகளிலும் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். தொடர்ந்து வேகமாக ரன்கள் எடுத்ததால் ஸ்கோர் 25-வது ஓவரில் 200 ரன்களைத் தொட்டது. 

நீண்ட நாள் கழித்து ஒருநாள் சதமெடுத்தார் ரோஹித் சர்மா, 83 பந்துகளில். இது அவருடைய 30-வது ஒருநாள் சதம். ஜனவரி 2020-க்குப் பிறகு முதல்முறையாக சதமெடுத்துள்ளார். அடுத்ததாக ஷுப்மன் கில் 72 பந்துகளில் சதமெடுத்தார். இது அவருடைய 5-வது ஒருநாள் சதம். கடந்த 4 ஒருநாள் ஆட்டங்களில் இரட்டைச் சதம் உள்பட மூன்று சதங்களை எடுத்துள்ளார் கில். 

எனினும் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். ரோஹித் சர்மா 85 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 101 ரன்களிலும் ஷுப்மன் கில் 78 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 113 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 157 பந்துகளில் 212 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். ரன் எடுக்கும்போது கோலியுடன் ஏற்பட்ட குழப்பத்தில் இஷான் கிஷன் 17 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். 

சூர்யகுமார் 14, வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 43-வது ஓவரிலேயே 313 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. இதன்பிறகு பாண்டியாவும் ஷர்துல் தாக்குரும் அபாரமாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோர் 375 ரன்களைத் தாண்ட உதவினார்கள். பாண்டியா - ஷர்துல் ஜோடி 34 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தது. ஷர்துல் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பாண்டியா 36 பந்துகளில் அரை சதமெடுத்தார். 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்தது. ஜகோப் டஃபி, டிக்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் இரண்டாவது பந்திலே ஆட்டமிழந்தார். டெவோன் கான்வே மட்டும் அதிரடியகா விளையாடி 100 பந்துகளில் 138 ரன்களை எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும். நிகோலஸ் 42 ரன்கள், டேரில் மிட்செல் 24 ரன்களுக்கும், மிட்செல் சாண்ட்னர் 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்த்த க்ளென் பிலிப்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக 41.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் எடுத்தது. 

இந்தியாவின் சார்பில் ஷர்துல் தாகூர், குல்தீப் தலா 3 விக்கெட்டுகளும்,  சஹால் 2 விக்கெட்டுகளும், ஹார்திக் பாண்டியா, உம்ரான் மாலிக் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.  ஷர்துல் தாகூர் ஆட்டநாயகானக தேர்வு செய்யப்பட்டார்.  90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தத் தொடரை 3-0 என முழுமையாக வென்றது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory