» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்று அசத்தல்: இந்திய மகளிர் அணி சாதனை!!

வெள்ளி 23, செப்டம்பர் 2022 10:58:20 AM (IST)



இங்கிலாந்து மண்ணில் 23 ஆண்டுகளுக்கு பின், ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இந்திய மகளிர் அணி புதிய சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1–0 என முன்னிலையில் இருந்தது. 2வது போட்டி கேன்டர்பரியில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. 

இந்திய அணிக்கு ஷபாலி வர்மா (8) ஏமாற்றினார். பின் இணைந்த ஸ்மிருதி மந்தனா, யஸ்திகா ஜோடி ஓரளவு கைகொடுத்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்த போது சார்லி டீன் பந்தில் யஸ்திகா (26) அவுட்டானார். சோபி எக்லெஸ்டோன் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட மந்தனா (40) நம்பிக்கை தந்தார்.
 
பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஹர்லீன் தியோல் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. ஹர்லீன், ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதம் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்த போது, ஹர்லீன் (58) ஆட்டமிழந்தார். பூஜா (18) நிலைக்கவில்லை.

அபாரமாக ஆடிய ஹர்மன்பிரீத், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். எக்லெஸ்டோன் வீசிய 49வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஹர்மன்பிரீத், கெம்ப் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர், ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 333 ரன் எடுத்தது. ஹர்மன்பிரீத் (143), தீப்தி சர்மா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு டாமி பியூமண்ட் (6), எம்மா லம்ப் (15), சோபியா டங்க்லி (1) ஏமாற்றினர். ஆலிஸ் கேப்சி (39), கேப்டன் அமி ஜோன்ஸ் (39) ஆறுதல் தந்தனர். பொறுப்பாக ஆடிய டேனி வியாட் (65) அரைசதம் கடந்தார். சார்லி டீன் (37) ஆறுதல் தந்தார். இங்கிலாந்து அணி 44.2 ஓவரில் 245 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ரேனுகா சிங் 4, தயாளன் ஹேமலதா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2–0 எனக் கைப்பற்றி முன்னிலை பெற்றது. இதன்மூலம் 23 ஆண்டுகளுக்கு பின், இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்றது. கடைசியாக 1999ல் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2–1 என கைப்பற்றி இருந்தது. ஆட்ட நாயகி விருதை ஹர்மன்பிரீத் கவுர் வென்றார். நாளை, மூன்றாவது போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது.

ஸ்மிருதி மந்தனா, ஒருநாள் போட்டி அரங்கில் 3000 ரன்னை எட்டிய மூன்றாவது இந்திய வீராங்கனையானார். இதுவரை 76 போட்டியில், 5 சதம், 24 அரைசதம் உட்பட 3023 ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே மிதாலி ராஜ் (7805 ரன், 232 போட்டி), ஹர்மன்பிரீத் கவுர் (3318 ரன், 123 போட்டி) இம்மைல்கல்லை அடைந்தனர்.

ஒருநாள் போட்டி வரலாற்றில், 3000 ரன்னை குறைந்த இன்னிங்சில் அடைந்த இந்திய வீராங்கனையானார் மந்தனா (76 இன்னிங்ஸ்). இதற்கு முன், மிதாலி ராஜ் 88 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டியிருந்தார். தவிர, 3000 ரன்னை அதிவேகமாக எட்டிய சர்வதேச வீராங்கனைகள் வரிசையில் 3வது இடம் பிடித்தார் மந்தனா. முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் (62 இன்னிங்ஸ்), மேக் லானிங் (64 இன்னிங்ஸ்) உள்ளனர்.

இரண்டாவது போட்டியில் 333 ரன் எடுத்த இந்திய பெண்கள் அணி, ஒருநாள் போட்டி அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், 2017ல் (டெர்பி) 281/3 ரன் எடுத்திருந்தது. தவிர இது, ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். கடந்த 2017ல் அயர்லாந்துக்கு எதிராக 358/2 ரன் குவித்தது முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணி இதுவரை 4 முறை (358, 333, 317, 302), ஒரு இன்னிங்சில் 300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 2வது சிறந்த ஸ்கோரை பெற்றார். கடந்த 2017ல் டெர்பியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 171 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தது இவரது சிறந்த ஸ்கோராக உள்ளது.

ஒருநாள் போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இந்திய வீராங்கனைகள் பட்டியலில் 3வது இடம் பிடித்தார் ஹர்மன்பிரீத்(143). முதலிரண்டு இடங்களில் தீப்தி சர்மா (188 ரன், எதிர்: அயர்லாந்து, 2017), ஹர்மன்பிரீத் (171* ரன், எதிர்: ஆஸி., 2017) உள்ளனர்.

இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், 111 பந்தில் 143 ரன் (4 சிக்சர், 18 பவுண்டரி) விளாசினார். இதில் முதல் 50 ரன்னை 64 பந்தில் (ஒரு சிக்சர், 4 பவுண்டரி, ‘ஸ்டிரைக் ரேட்’ 81.25) எடுத்தார். அடுத்த 50 ரன்னை 36 பந்தில் (8 பவுண்டரி, ‘ஸ்டிரைக் ரேட்’ 133.33) எட்டினார். 100 பந்தில் சதம் அடித்தார். அடுத்த 11 பந்தில், 43 ரன்(3 சிக்சர், 6 பவுண்டரி, ‘ஸ்டிரைக் ரேட்’ 390.91) விளாசினார்.

ஒருநாள் போட்டி அரங்கில் அதிக சதம் விளாசிய இந்திய வீராங்கனைகள் வரிசையில் 2வது இடத்தை ஸ்மிருதி மந்தனாவுடன் பகிர்ந்து கொண்டார் ஹர்மன்பிரீத் கவுர். இவர்கள் தலா 5 சதம் அடித்துள்ளனர். முதலிடத்தில் மிதாலி ராஜ் (7 சதம்) உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory