» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: அஸ்வின், ரோகித் சர்மா முன்னேற்றம்

திங்கள் 1, மார்ச் 2021 12:05:28 PM (IST)டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின், ரோகித் சர்மா வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஆமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் (பிங்க் பந்து) இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது நாளிலேயே வெற்றி பெற்றது. இந்த போட்டியின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-7 இடங்களில் மாற்றமில்லை. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 2-வது இடத்திலும் தொடருகிறார்கள். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 4-வது இடத்தில் நீடித்தாலும் பிங்க் பந்து டெஸ்டில் சோபிக்காததால் 16 புள்ளிகளை இழந்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி 5-வது இடம் வகிக்கிறார்.

ஆமதாபாத் டெஸ்டில் கடிமான சூழலில் நிலைத்து நின்று ஆடி 66 மற்றும் 25 ரன் வீதம் எடுத்து அசத்திய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 6 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். 52 புள்ளிகளை கூடுதலாக சேகரித்த அவர் மொத்தம் 742 புள்ளிகளுடன் தனது சிறந்த தரவரிசையை எட்டியிருக்கிறார். மற்ற இ்ந்திய வீரர்கள் புஜாரா 10-வது இடத்திலும் (2 இடம் சரிவு), துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 13-வது இடத்திலும் (ஒரு இடம் குறைவு), இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 14-வது இடத்திலும் (3 இடம் சறுக்கல்) உள்ளனர்.

அஸ்வின் 3-வது இடம்

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ‘நம்பர் ஒன்’ இடத்தை நீண்டகாலமாக ஆக்கிரமித்துள்ளார். 3-வது இடத்தில் இருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அதே சமயம் ஆமதாபாத் டெஸ்டில் மொத்தம் 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் 19 புள்ளிகள் கூடுதலாக சேர்த்ததுடன் தரவரிசையில் 7-ல் இருந்து 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். இ்ந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு இடம் சரிந்துள்ளார். பகல்-இரவு டெஸ்டில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹீரோவாக ஜொலித்த இந்திய சுழற்பந்து வீ்ச்சாளர் அக்‌ஷர் பட்டேல் கிடுகிடுவென 30 இடங்கள் எகிறி 38-வது இடத்தை வசப்படுத்தியுள்ளார். 100-வது டெஸ்டில் ஆடிய இந்தியாவின் இஷாந்த் ஷர்மா மாற்றமின்றி 16-வது இடத்தில் தொடருகிறார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் 3 இடங்கள் அதிகரித்து 28-வது இடத்தை பெற்றுள்ளார்.

ஆல்-ரவுண்டர் வரிசை

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றம் இல்லை. வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் முதலிடமும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2-வது இடமும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 3-வது இடமும், வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் 4-வது இடமும், இந்தியாவின் அஸ்வின் 5-வது இடமும் வகிக்கிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Thalir Products
Nalam PasumaiyagamThoothukudi Business Directory